பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57 கால்டுவெல்


இடத்திற்கும் ‘புன்னைக்காயல்’ என்ற பெயர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். காயல்களுக்கருகேயுள்ள இரண்டு இடங்களின் பெயர்களாகிய காயல்பட்டினம், சோனகாபட்டினம் என்பன இதற்கு நம்பிக்கையூட்ட உதவுகின்றது.’

காயல் நகரம்

1861 இல் கொற்கைக்குச் சென்ற நான் கிரேக்கர்களுடைய கொல்கையே கொற்கை என்பதை அறிந்தேன். இந்த ஒற்றுமையால் என் ஊக்கம் அதிகரித்தது. அதே சமயத்தில் கொற்கைக்கும் கடலுக்கும் இடையே பாதித் துரத்தில் ‘பழைய காயல்’ என்று வழங்கப்படும் முக்கியமல்லாத ஓர் இடம் மார்க்கபோலோ கூறும் காயல் ஆகும் என்ற முடிவிற்கு வந்தேன்.

மத்திய காலத்தில் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை ஓரத்தில் மிகவும் புகழ்வாய்ந்த நகரமாயும் துறைமுகமாயுமிருந்தது இதுவே. இதற்குப் பிறகு ஏறக்குறைய பத்து ஆண்டுகட்குப் பின்னரே கர்னல் யூல் மார்க்கபோலோ புத்தகத்தைத் தயாரித்துக் கொண்டிருந்த பொழுது வெளியிட்டேன். கொற்கை, காயல் என்னும் இரண்டு இடங்களும் தாமிரபரணி ஆற்றுக் கழிமுகப் பூமியில் அமைந்திருக்கின்றன. கொற்கை கடலிலிருந்து ஐந்து மைல் தூரத்திலும் காயல் இரண்டு மைல் தூரத்திலும் உள்ளன. ஆனால், இவை முதலில் கடற்கரையிலேயே இருந்தன. அதே சுற்றுவட்டாரத்தில் அத்தகைய புகழ்பெற்ற இரண்டு இடங்களைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கதெனத் தோன்றுகிறது. ஆனால், அதே சமயத்தில் அருகிலுள்ள இடங்களின் நிலவியலை ஆராயின், ஏன் அவை அவ்வாறு புறக்கணிக்கப்பட்டன என்பது விளங்குகிறது. ஆற்றின் கூடு (சங்கமத்) துறையினருகே கடலில் வண்டல்மண் சேர்ந்துவிட்டதால், அல்லது கடற்கரை உயர்ந்தமையால், அல்லது இரண்டு காரணங்களாலும் நாளடைவில் கொற்கை உள்நாட்டுள் ஒதுக்கப்பட்டதால் கடல் வாணிகத்திற்கான வசதிகள் இல்லாதுபோயின. இதற்கு மாறாகக் கடலில் சேரும் ஆழமில்லாத நீர்நிலை என்ற பொருள்படும் காயல் என்ற பட்டினம், கடற்கரை மட்டத்திற்கு உயர்ந்து மேலும் பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது. இப்போதோ காயல் ஒரு சிறிய கிராமமாய்க் குறுகிவிட்டது. அதில் மகம்மதியர்கள் பாதிப் பகுதியிலும் ரோமன் கத்தோலிக்கச் செம்படவர்கள் பாதிப் பகுதியிலும் வசித்து வருகின்றார்கள். அதனருகே அதைவிடச் சிறிய ஒரு கிராமத்தில் பிராமணர்களும் வேளாளர்களும் வசித்து வருகின்றார்கள்.

பின்வருவது மார்க்கபோலோ கண்ட காயல் - கர்னல் யூல், 305