பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 62


நிலப்பகுதிக்கும் இடையே கடல் ஒரு குடாவை உண்டாக்குகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அந்தக் குடாவைச் சுற்றிலும் தண்ணீரின் ஆழம் பத்து அல்லது பன்னிரண்டு ‘பாதங்க’ளுக்கு (அதாவது 60 அல்லது 72 அடி) அதிகமாய் இல்லை. முத்துக்குளிப்பவர்கள் பெரியவும் சிறியவுமான தங்கள் மரக்கலங்களைச் செலுத்திக் கொண்டு இந்தக் குடாவிற்குள் செல்வார்கள். ஏப்பிரல் மாத ஆரம்பத்திலிருந்து மே மாதத்தின் பாதிவரை அவர்கள் அங்கேயே தங்கி விடுவார்கள். அவர்கள் முதலில் பெட்டிலால் என்று வழங்கப்படும் இடத்திற்குச் செல்வார்கள். பின்னர் குடாவின் உட்புறத்தை நோக்கி அறுபது மைல் செல்வர். அங்கு அவர்கள் நங்கூரம் பாய்ச்சிப் பெரிய மரக்கலன்களிலிருந்து இறங்கி, சிறு படகுகளில் ஏறிக் கொள்வார்கள். பல வியாபாரிகளும் அவர்களுடன் செல்வார்கள். அவ்வியாபாரிகள் வெவ்வேறு கூட்டங்களாகப் பிரிந்து செல்வார்கள். ஒவ்வொரு கூட்டத்தினரும் பலரை ஏப்பிரலிலிருந்து மே மாதம் பாதிவரை சம்பளத்திற்கு அமர்த்திக் கொள்வார்கள். முதலில் கிடைக்கும் முத்துகளில் பத்தில் ஒரு பங்கை அரசனுக்குத் திறை செலுத்த வேண்டும். தண்ணீருக்குள் முத்துகளைத் தேடுவதில் முனைந்திருக்கும் முத்துக்குளிப்பவர்களைப் பெரிய மீன்கள் துன்புறுத்தாதவாறு மந்திரத்தால் அவைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு அவர்கள் குளித்தெடுக்கும் முத்துகளில் இருபதில் ஒரு பங்கைக் கொடுக்க வேண்டும். இந்த மீன்மந்திரம் செபிப்பவர்கள் அமியமன் (பிராமணர்) என்று வழங்கப்படுவார்கள். அவர்களுடைய மந்திரம் பகல் பொழுதில் மட்டும் சக்தியுடையாதாயிருக்கும்; ஏனெனில், இரவில் மந்திரங்களைத் தளர்த்தி மீன்கள் தம் விருப்பம் போல எல்லாவித இடையூறுகளையும் விளைக்கும் படி விட்டுவிடுவார்கள். இந்த அபியமனர்களுக்கு மிருகங்கள் பறவைகள் முதலிய ஒவ்வோர் உயிருள்ள பொருளையும் எப்படிக் கட்டுப்படுத்துவதென்பது தெரியும். முத்துக்குளிப்பவர்கள் சிறுபடகுகளில் ஏறி வந்ததும் தண்ணீருக்குள் குதித்து ஆழத்திற்கு நீந்திச் செல்வார்கள். அங்கு அவர்களால் இயலும் வரையில் தங்கியிருப்பார்கள். அங்கு முத்துகளுடைய சிப்பிகளைக் கண்டு அவைகளைத் தொகுத்துத் தங்கள் இடுப்புடன் கட்டியிருக்கும் வலைப்பையில் இட்டுக் கொண்டு அந்தப் பையுடன் கடல் மட்டத்திற்கு வருவார்கள். பிறகு மீண்டும் நீரில் மூழ்குவார்கள். அவர்களால் மூச்சுப்பிடிக்க இயலாதென்ற நிலை ஏற்படும் பொழுது மறுபடியும் அவர்கள் தண்ணீருக்குமேலே வருவார்கள்; சிறிது நேரத்திற்குப்பின் மறுமுறையும் முழுகுவார்கள். இவ்வாறு நாள் முழுதும்