பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65 கால்டுவெல்


இடங்கூட அண்மைக்காலத் தோற்றத்தையுடையது. காயல் பட்டினத்தைப் போலவே இங்குள்ள பல வியாபாரிகள் தங்களுடைய முன்னோர்கள் காயல் பட்டணத்திலிருந்து போர்ச்சுகீசியரின் வருகையைத் தொடர்ந்து முதலில் காயலிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். (இப்போது காயலில் முகமதியர்கள் மிகுதி. அவர்களிடம் ‘சூரியகாந்தி’யைப் ‘பொழுது வணங்கி’ என்பதுபோலக் குறிக்கும் பல இனிய - எளிய - தனித்தமிழ்ச் சொற்கள் இப்போதும் பேச்சுத் தமிழில் உண்டு என்பதை மறைந்த ஆராய்ச்சி அறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் தெரிவித்துள்ளார் - ந.ச.).

மகம்மதியர்களின் ஆட்சி

இபின் படுடா என்ற டில்லி அரசர்களின் மகம்மதிய சேவகன் 1348-49 இல் தன் எஜமானது வியாபார விஷயமாக ஆண்டுதோறும் செல்கின்ற சீன ஜங்கு ஒன்றில் குயிலானுக்குச் செல்கின்ற வழியில், மலபாருக்கு (கொல்லம்) வந்தான். மபார் முழுவதும் பாண்டிய சோழ நாடுகளும் சேர்ந்து மகம்மதிய அரசர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்ததைக் கண்டான். 1311 இல் காபர் படையெடுப்பிலிருந்து இந்நாடு மகமதியர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இருபது முப்பது வருடங்களாக டில்லி அரசர்களால் நியமிக்கப்பட்ட கவர்னர்களால் நாடு ஆளப்பட்டு வந்தது. நாளடைவில் அக்கவர்னருள் ஒருவனாகிய ஜலாலுதீன் ஹாஸன் என்ற பெயருடைய ஷெரிப்பு அல்லது சையது, மகம்மதியருக்கு எதிராகப் புரட்சி செய்து சுதந்திரமடைந்தான். இந்தச் சூழ்நிலை பெரிஷ்டாவினால் குறிப்பிடப்படுகிறது. மகம்மதியர்களின் ஆட்சி மிகவும் உறுதியாக நிலைநாட்டப்படவில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில், இபின்படுடா அங்கே ஏற்கெனவே பல உள்நாட்டுப் புரட்சிகள் ஏற்பட்டிருந்தன என்றும், மடாரில் இறங்கியவுடன் அங்கு அரசு செலுத்திவந்த சுல்தான் ஓர் அந்நியருடன் (அநேகமாய் அவன் நாடு கடத்தப்பட்ட பாண்டிய அரசர்களின் எஞ்சிய பிரதிநிதியாகவோ அல்லது அவனிடம் பரிவு கொண்டவனாகவோ இருந்திருக்க வேண்டும்) சண்டை செய்து கொண்டிருந்ததைக் கண்டான். சுல்தானின் எதிரிகளுள் பெரும்பாலோர் இராமநாதபுரத்து மறவர்களாயிருக்க வேண்டும். ஏனெனில் சிலோனிலிருந்து மன்னார் குடாவிற்குச் செல்லும் கடல்மார்க்கத்தில் ஆழமற்ற கடலின் துறைமுகத்தில் கப்பல் உடைந்தது. அப்பொழுது அவன் எங்குக் கரை ஏறினானோ அதற்கு அருகில் இராமநாதபுரத்தில்தான் சுல்தான் இருக்க வேண்டுமென்று உணர்ந்தான். இந்நாடு மறவர்கள் நிறைந்த நாடு. மறவர் வீரப்பரம்பரையினர். அவர்கள் சிறிய முகம்மதிய இளவரசர்