பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 66


களுக்கு நெடுங்காலம் அடங்கி இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை. இந்த முகம்மதியர் ஆட்சியைப் பற்றி டெய்லரின் சரித்திரக் கையெழுத்துப் பிரதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்கள் ஆட்சி 1323 ஆம் ஆண்டிலிருந்து 1370 ஆம் ஆண்டு வரை - அதாவது, 47 வருடங்கள் வரை நீடித்ததாகக் கூறப்படுகிறது. இக்கால அளவில் சுதந்திர மகம்மதிய அரசாட்சிக் காலமும் சேர்க்கப்பட்டிருக்கலாம். மேலும், மகம்மதியர்களால் வெல்லப்பட்டு டில்லிக்கு அனுப்பப்பட்ட பாண்டிய அரசன் பெயர் பராக்கிரம பாண்டியன் என்பது கூறப்படுகிறது. இபின்படுடா மலபார் சுல்தான்கள் மதுரையிலிருந்து அரசாட்சி செய்தார்கள் என்று கூறுகிறார். அரசனுடைய அரண்மனையும் அங்குதான் இருந்தது. அவர் மதுரை மிகப் பெரிய நகரமாகவும் டில்லியைப் போன்றே விசாலமாகவும் இருந்ததாகக் கூறுகிறார்.

துவார சமுத்திர விஜயநகர ராஜ்யங்கள்

சோழ பாண்டியர்களின் ஆட்சி 12 ஆம் நூற்றாண்டில் பலவீனமடைய ஆரம்பித்ததிலிருந்து தென்னிந்தியாவில் துவாரசமுத்திர விஜயநகர ராஜ்யங்கள் மிக்க வலிமையடைந்து உன்னத நிலையிலிருந்தன. மதுரை திருநெல்வேலி முதலியவற்றின் மத்தியகால சரித்திரத்தைச் சரியானபடி அறிந்து கொள்வதற்குத் துவாரசமுத்திர விஜயநகர அரசுகளின் விவரங்களையும் குறிப்பிட வேண்டுவது அவசியம்.

துவார சமுத்திரம்

தமிழ் இலக்கியத்திலும், கல்வெட்டிலும் துவார சமுத்திரம் என்ற பெயரை நான் காணவில்லை (புறநானூற்றில் வரும் ‘துவரை ஆண்ட’ என்ற பகுதியைக் கால்டுவெல் அறியார் - ந.ச.). ஆனால், வலிமை வாய்ந்த தெலுங்கு அரசபரம்பரையினரான விஜயநகர அரசர்களுக்குப் பிறகு பலம் வாய்ந்த; கன்னடிய அரசபரம்பரையினர் ஆதிக்கத்திற்கு வந்தனர் என்பது மட்டும் உண்மையான செய்தியாகும். இது சில காலங்களில் புகழ் பெற்ற மைசூர் அரசபரம்பரை என்று வழங்கப்படுகிறது. ஆனால், மைசூர் என்ற பெயர் நெடுங்காலத்திற்குப் பிந்தியது. அது சரியாக உண்மையில் வழக்கு முறையில் கன்னடர் அதாவது கன்னடிய அரசபரம்பரை என்று கூறப்படுகிறது. இதன் ஆங்கிலப் பெயரான ‘கனரிஸ்’ என்பதற்குக் கருநடம் அல்லது கருநாடகம் என்பதன் சுருக்கப் பெயராகிய கன்னம் அல்லது கன்னரா என்பதற்கும் உள்ள சம்பந்தத்தைக் குறிக்கவே இப்பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. கருநடம் என்பது முதலில் கறுப்புநாடு -