பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69 கால்டுவெல்


நாடுகளையும் சேர்த்துத் தமிழ்நாடு) வடகிழக்கே தெலுங்கானாவின் ஒரு பகுதியும் இந்த நாட்டிற்கு எல்லைகளாக இருந்தன (ரைஸின் மைசூர் கல்வெட்டுகள்).

திருநெல்வேலியில் எங்குச் சென்றாலும் எந்த முக்கியமான உத்தியோகப் பதவிகளும் அல்லது எந்த முக்கியமான வேலைகளும் கன்னடியன் அல்லது கானரிஸ் மனிதனால் முறையே நிரப்பப்பட்டும் செயல்பட்டும் வந்தன (அரசன் எவ்வழி அவ்வழி ......! - ந.ச.). அதற்கு உதாரணம் கன்னடியன் அணைக்கட்டு (கன்னட நாட்டுச் செல்வன் ஒருவன் நெல்லை நாட்டிற் போந்து தாமிரபருணி ஆற்றில் ஓர் அணை கட்டி அதன் நீரைக் கால்வாய்களின் வழியாகக் கொண்டு சென்று பயிர்த்தொழிலைப் பேணினான் என்று பழங்கதை ஒன்று வழங்குகிறது. அவ்வாற்றில் மூன்றாம் அணைகட்டு, கன்னடியன் அணை என்று இன்றும் வழங்குவது அதற்குச் சான்றாகும். அக்கன்னடியன் நெல்லை நகரத்தின் அருகே பெரியதோர் ஏரியும் கட்டி அதற்குக் கன்னடியப்பேரேரி என்று பெயரிட்டான்[1] - பேராசிரியர் - டாக்டர் ரா.பி. சேதுபிள்ளை - ஊரும் பேரும் பக்.23). இதைக் கட்டிய கன்னடிய மனிதன் பாளையங்கோட்டையிலுள்ள கோட்டையின் பழைய பகுதி ஒன்றைக் கட்டியமை கூறப்படுகிறது. அது மதுரையில் நாயக்கர்கள் ஆட்சி தொடங்குவதற்கு முந்திய காலத்தவரைச் சேர்ந்தது. அச்சமயத்தில் தெற்கே முழுவதும் துவாரசமுத்திரத்தை ஆண்ட கன்னடிய அரசர்கள் வெற்றி பெற்றிருந்தார்கள். அதனால் அவர்கள் ஆட்சி உன்னத நிலையிலிருந்தது என்று முடிவு செய்யத்தக்க காரணம் இருக்கிறது.

விஜயநகரம்

துவாரசமுத்திரம் வீழ்ச்சியடைந்ததும் விசயநகரம் தோன்றலாயிற்று. நகரமும் மாகாணமும் தென்னிந்தியாவிலுள்ள எல்லா மாகாணங்களையும்விட மிக்க புகழும் வலிமையும் பெற்று விளங்கின. இது 1336இல் வாரங்கல்லிலிருந்து வந்த இரண்டு அகதிகளால் தோற்றுவிக்கப்பட்டது. வாரங்கல் என்பது ‘ஒரு தனிக்கல்’ என்ற பொருளில் ஒருகல்லு என்ற பெயருடையது! (ஓரங்கல் - வாரங்கல்லாயிற்று - ந.ச.). மகம்மதியர்களால் 1323இல் பிடிக்கப்பட்ட பிறகு நிஜாம் நாட்டுடன் சேர்க்கப்பட்டது. அவர்களுடைய பெயர்கள் ஹரிகரர், புக்கர் என்பன. ஹரிகரர் என்பவர் தம் பெயரை ஹரிஹரர்


  1. நாளடைவில் அவ்வேரியும் அதைச்சார்ந்த ஊரும் கன்னடியப்பேரி என்று மருவி வழங்கலாயின.