பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/90

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81 கால்டுவெல்


அடக்கினாரென்பது கூறப்படுகிறது. MSS என்ற இதழில் இந்தத் தளகர்த்தர் முதல் விஜயநகர இராயராகிய புக்கராயரின் பேராளன் (பிரதிநிதி) என்பது கூறப்படுகிறது. 1350 இல் புக்கர் விஜயநகர அரசர் ஆனார். துவார சமுத்திரக் கன்னட அரசர்களுக்கு முந்திய கடைசி அரசர்களால் ஆளப்பட்டு வந்த பல மாகாணங்களின் தனி உரிமையில் ஒரு பகுதியைப் புதிய விஜயநகர அரசிற்காக உரிமை கொண்டாடி புக்கர் கைக்கொள்ள நினைத்தது சரி என்று தோன்றுகிறது. ஆகையால் இக்குறிப்புகளிலிருந்து விஜயநகர அரசர்களிடமிருந்து உதவிபெற்ற போதிலும் இரண்டாவது வரிசை பாண்டிய அரசமரபு முகம்மதியர்களை வளரவிடாது தடுத்தது என்று துணிவுடன் முடிவு கூறலாம். முஜகிட்ஷா என்பவர் 1374 இல் விஜயநகரம் கன்னியாகுமரிக்கு இடைப்பட்ட நாடுகளைச் சூறையாடி மாலிக்காபூரைப் போல் இராமேசுவரத்திற்கு முன்னேறினார். இது நடக்கக் கூடியதாகத் தோன்றவில்லை. அப்படியே அவர் செய்திருந்தாலும் அந்த முற்றுகை மிகவும் அழிவு செய்வதாய் இருந்திருக்கவேண்டும். ஆனால், அப்பேரழிவிற்கு அறிகுறியாக எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.

பாண்டிய அரசர்களின் இரண்டாவது வரிசைப் பட்டியலைப் போல் எதையும் தயாரிக்க என்னால் இயலவில்லை. நல்வினைப் பயனாகக் கல்வெட்டுகளை எல்லாம் அரசனின் ஆட்சிக்கால ஆண்டில்மட்டும் குறிப்பிடாது சக அல்லது சில ஒப்புக்கொள்ளப்பட்ட நூற்றாண்டளவில் குறிப்பிடும் பழக்கம் வட இந்தியாவிலும் மத்திய இந்தியாவிலும் தெலுங்கு கன்னட நாடுகளிலும் இருந்து வந்திருக்கிறது. ஆனால், தீவினைப் பயனாக இப்பழக்கம் பழைய பாண்டி நாட்டில் ஏற்படவில்லை. ஆகையால், நான் சேகரித்த இக்கால வரையறைக்குட்பட்ட சில குறிப்புகளும் வரலாற்று வழியாக உண்மையென்று உணர்த்துவதற்கு ஏதுவில்லாமற் போயிற்று. அவற்றுள் ஒன்றுமட்டும் - நாம் ஏற்கென்வே கூறியிருப்பது போல - தென் திருவிதாங்கூரிலிருக்கிறது. அக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள அரசனே அடுத்து வந்த அரசன், பொன்னன் பெருமாள் பராக்கிரம பாண்டியன். அவன் ஆட்சிக்கு வருவதற்குமுன் அறுபது ஆண்டு இடைவெளி நிரப்பப்படாமலே இருக்கிறது. அவனது ஆட்சி சக ஆண்டிற்குச் சரியான கி.பி.1431 ஆகும். தென்காசிக் கோவிலுக்கு எதிரேயுள்ள தூணிலிருக்கும் கல்வெட்டில் இச்செய்தியை நான் கண்டேன் (எப்படி அந்நாளில் கால்டுவெல் செய்த ஆராய்ச்சி! இந்நாளில் நாம் எதற்குத் தூணைப் பயன்படுத்துகிறோம்? - ந.ச.) பொன்னம்பெருமாள் பராக்கிரம பாண்டியனைப் பற்றிய அக்கல்வெட்டு ஒருவிதப் பேரறிவிப்பாகும். ஏனெனில், இக்கோயில் பதினேழு