பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருநெல்வேலி சரித்திரம் 84


டர்ன்புல்லின் அறிவிப்புகள் கூறுகின்றன. அக்கோவிலின் எதிரிலுள்ள முன்னமே குறிப்பிட்ட தூண் கல்வெட்டு அவன் ஆட்சி 1431 இல் ஆரம்பித்ததாகக் கூறுகிறது.

பின் வந்த அந்தப் பாண்டிய மரபு அரசர்களின் நீண்ட ஆட்சிக்காலம் முழுவதும் விஜயநகர அரசர்கள் தங்கள் அதிகாரத்தை அதிகமாகச் செலுத்தி வந்தார்கள் என்பது தெரிகிறது. ஆனால், அவர்கள் பாண்டிய அரசர்களின் உள்நாட்டுச் செயல்களில் தலையிட்டதாகத் தெரியவில்லை என்று நான் நினைக்கிறேன். அவ்வப்போது படை உதவியும் கப்பத் தொகையும் பெற்றுக் கொள்வதுடன் மனநிறைவு அடைந்திருந்தனர். அதற்குப் பதிலாக அவ்வரசர்கள் அயல் நாட்டுப் படையெடுப்புகளிலிருந்து அவர்கள் அதிகாரத்திற்குட்பட்ட இடங்களைக் காத்து வந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் மனம்போனவாறு சண்டை செய்து காலங்கழிக்காமல் அடிக்கடி கண்காணிக்கப்பட்டு வந்தார்கள்.

மதுரை நாயக்கர்கள்

நெல்சனின் மதுரை மானுவலில் நாயக்கர்களின் சரித்திரம் முழுமையும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் திருநெல்வேலியைப் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாய் இருக்கின்றன. அதில் கூறப்பட்டுள்ள செய்திகளில் உள்நாட்டார் செவிவழிச் செய்தியை நம்பி எழுதப்பட்டவைகளும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவைகளும் எவ்வளவு தூரம் உண்மையான செய்திகள் என்பது ஐயப்பாட்டுக்குரியதுதான். அதில் கூறப்பட்டுள்ள நாயக்கர் வரலாற்றின் முக்கியச் செய்திகள் உண்மையானவை என்பதில் ஐயமில்லை. அவை சரி என்று ஒப்புக்கொள்ளவும் தகுதியுடையவை. ஆனால் உண்மையாக நாம் நம்பக்கூடிய செய்திகளும் ஆண்டுகளும் ரோமன் கத்தோலிக்க மதக்குருக்களால் மதத் தலைவர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்களினால் உறுதிப்படுகின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. அக்காலத்தில் எழுதப்பட்ட இக்கடிதங்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இந்தச் செய்தி மூலம் 1600க்கு முந்திய காலத்திற்குரியவற்றைக் குறிப்பிடவில்லை. எடுத்துக்காட்டாக, விசுவநாத நாயக்கரின் ஆட்சியைப் பற்றிய செய்திகளை எல்லாம் நெல்சன் டெய்லரின் வரலாற்றுக் கையெழுத்துப்படிகளிலிருந்தும் மக்கன்ஸி தொகுத்தவைகளிலிருந்தும் எடுக்கப்பட்டிருப்பதால் வழிவழிக் கதை வரலாற்றைவிட இவை மோசமானவை என்று எனக்குத் தோன்றுகிறது. இந்நூற்றாண்டின் வரலாற்றில் ஆரம்பத்திலிருந்து ஏறத்தாழப் பாதிக்கு மேற்பட்ட காலம்வரை விவரிக்கப்படும் நாயக்கர்களைப் பற்றிய