பக்கம்:கால்டுவெல்லின் திருநெல்வேலி சரித்திரம்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85 கால்டுவெல்


செய்திகளில் உண்மை பாதி, கற்பனை பாதி, அத்தகையவர்களின் பண்பு நலங்களைப் பற்றியும் ஆங்கிலக் கலெக்டரின் குறிக்கோள்களைப் பற்றியும் விவரிக்கப்படும் செய்திகள் முழுக் கற்பனைக் கதையைவிடச் சிறிது நம்பத் தக்கன என்று எண்ணுகிறேன் (அறிவியல் வளர்ந்தால் கற்பனை குறையும் அன்றோ? - ந.ச.).

நாயக்கர்களின் ஆட்சி அறிவிப்புகள் பொதுவாக 1559 இல் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றன. ஆனால் அத்தேதி மிக பிற்காலத்து உள்நாட்டு ஆதாரங்களைச் சார்ந்தே இருக்கிறது. அந்தத் தேதியில் விஜயநகர ஆதிக்கம் பெரிதும் பலமிழந்து விட்டதால் இதற்கு முன்பாகவே நாயக்கர்கள் மதுரை நிகழ்ச்சிகளில் குறுக்கிட்ட சம்பவம் ஏற்பட்டிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது. அதாவது, அவை சுமார் 1559 இல் கிருஷ்ணராயர் ஆட்சிக் காலத்தில் - நடைபெற்றிருக்க வேண்டும்.1553இல் எழுதப்பட்ட புகழ்வாய்ந்த பிரான்ஸில் சேவியரின் கடிதங்களினின்றும் படகர்களாகிய வடுகர்கள் அல்லது நாயக்கர்கள் உள்நாட்டுப் பகுதிகளை எல்லாம் ஏற்கனெவே வசப்படுத்திவிட்டார்கள் என்பதையும் கன்னியாகுமாரிவரை தென்கடற்கரை முழுவதையும் கைப்பற்ற அவர்கள் முயன்றார்கள் என்பதையும் தவிர வேறு எந்தச் செய்தியும் தெளிவாய் இல்லை. இந்த நிலையை ஒப்புக் கொண்டால், இருபது ஆண்டுகள்வரை கிருஷ்ணதேவராயர் ஆட்சிக்கு முன்வரை அது 1520 வரை நடந்த நிகழ்ச்சிகளைத் தேட வேண்டுவது இன்றியமையாததாகும்.

தெற்கே ஆட்சி புரிந்து வந்த பாண்டிய அரசன் தன் எதிரியை அடக்க விஜயநகர அரசனின் உதவியை நாடியதால் அவன் முதன்முதல் தென்னிந்திய நிகழ்ச்சிகளில் தலையிட்டான். தஞ்சாவூர் அரசன் பாண்டியனை வென்று அவன் நாட்டைக் கைப்பற்றினான். அதனால், சுந்தரபாண்டியன் முன்பு டில்லிக்கு ஓடியதுபோலப் பாண்டியன் விஜயநகரத்திற்கு ஒடிச் சரண் புகுந்தான். தஞ்சாவூர் அரசன் பெயர் வீரசேகரன். மதுரை அரசன் பெயர் சந்திரசேகரன். இந்தப் பெயர்களை நான் உண்மையானவையல்ல என்று தான் நினைக்கிறேன். இந்த வேண்டுகோளுக்கிணங்கி விஜயநகர அரசன் தன்னுடைய தளகர்த்தனான நாகம்ம நாயக்கனைக் கொண்டு சோழ அரசனைத் துரத்திவிட்டுப் பாண்டியனுக்கு அவன் மூதாதையர்களின் அரசுரிமையை வழங்கினான். இங்குக் கூறப்பட்டிருப்பதுபோல் உண்மையில் நடந்திருக்குமானால், இங்குக் குறிக்கப்பட்டிருக்கும் பாண்டிய அரசன் பராக்கிரம பாண்டியனாய் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், அவனே 1516 இல் ஆட்சியைத் தொடங்கினவன்.