பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிடமும் வட இந்திய மொழிகளும்

89

கெளர மொழிகளின் இடப் பெயர்களுக்கும் திராவிட மொழிகளின் இடப் பெயர்களுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேற்றுமை யிருப்பதை நோக்க, 'அம் மொழிகளின் திரிபுக்கு மூலகாரணமான தாக்குதல்கள் வேறெவையாயினும் ஆகக்கூடும், திராவிட மொழிகள் ஆகா என்பது தெற்றெனப் புலப்படுகின்றது. ஆனால், அதே இடப் பெயர்களின் ஆராய்ச்சியாலேயே பல வடமொழிகளிலும் சித்திய விகுதியாகிய னகரம் இருப்பது காணலாம். அதனோடு, தன்மையில் வட இந்திய மொழிகள் ஒன்றிலேனும் வடமொழி எழுவாயுரு இல்லாமல், துருக்கிய மொழியின் எழுவாயைப் போன்ற மை(ன்) அல்லது ம(ன்) என்ற சித்திய தோற்றமுடைய உருவே நிலவுதல் காண்க. ஒருவேளை எதிர்கால ஆராய்ச்சிகளால் திராவிட உறவு உண்டென்று ஏற்பட்டாலும் ஏற்படலாம். எனவே, வட இந்திய மொழிகளின் வட மொழிச் சார்பற்ற பகுதியும், தென் இந்திய மொழிகளும் இரண்டும் ஆரியச் சார்பற்றவை என்பதும், இரண்டும் சித்தியச் சார்புடையவை என்பதுந் தவிர வேறு எவ்வகையிலும் ஒப்புமையுடையன அல்ல என்றே துணியத் தகும்.

இனி, டாக்டர் குண்டெர்ட் வட இந்திய மொழிகளில் மட்டுமல்ல, வட மொழியிலேகூட, திராவிடத் தாக்குக் காணப்படுகிறது என்கிறார்.[1] இந்தி மொழியை ஆராய்ந்த கிரெளஸ் என்பவரோ, வடமொழிச் சார்பற்ற பகுதி யென்றொன்று அவ்வளவா யிருந்திருக்க வழியில்லை என்று கூறி, அதற்குக் கீழ்வரும் காரணங்களைக் காட்டுகிறார்: (1) அம்மொழியின் பழமையான இலக்கண நூலார் அதனைக் குறிப்பிடாதது. (2) வட மொழிச் சார்பற்றதென விரைந்து துணியப்பட்ட சொற்கள், நுண்ணிய ஆராய்ச்சியால், வட


  1. ТҺе Journal of the German Oriental Society for 1869.