பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/125

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

இந்தச் சித்திய இனம் இந்து - ஐரோப்பிய இனத்தைப் போல் ஒரு தனி இனம் என்று சொல்வதைவிடப் பல இனங்களை உட்கொண்டதோர் பேரினம் என்று சொல்வதே சாலும். இப்பேரினத்துட்பட்ட குழுக்களின் ஒருமைப்பாடு நுணுக்கமான ஒற்றுமைகளால் நிறுவக்கூடியதன்று, பெரும்போக்கான வடிவு அல்லது அமைப்பு ஒற்றுமைகளினாலேயே நிறுவப்படும். எனவே, இந்து ஐரோப்பிய இனத்துட்பட்ட மொழிகளாகிய வடமொழி, ஸெந்து (கீழப் பழம் பாரஸீகம்), பழம்பாரஸீகம், கிரேக்கம் இலத்தீனம், காதிக் லித்துவேனியம், ஸ்லவோனியம், கெல்த்தியம் முதலிய ஒவ்வொன்றும் ஓரினத்துட்பட்ட தனி மொழிகளேயாம். ஆனால் சித்தியப் பேரினத்திலே இவற்றிலும் மிகுந்த வேற்றுமைகளையுடைய சிற்றின மொழிகள் ஐந்தாறுக்கு மேற்பட்டுள்ளன. இவ்வுட்பிரிவினங்கள் ஒவ்வொன்றிலும் கிட்டத்தட்ட இந்து - ஐரோப்பிய மொழிகளில் எத்தனைத் தனி மொழிகள் உண்டோ அத்தனைத் தனி மொழிகள் உள்ளன. இவைபோக வகைப்படுத்தி இந்நாள் வரை இனமாகச் சேர்க்க முடியாத நிலையுடைய இருபது முப்பது தனிமொழிகள் கூட உள்ளன.

இந்து - ஐரோப்பிய இனத்திற்கும் சித்தியப் பேரினத்திற்கும் இடையில் உள்ள இப்பெரு வேற்றுமைக்குக் காரணம் முதன்முதற் கொண்டே முன்னைய இனத்தவர் உயர் அறிவும் நாகரிகமும் படைத்திருந்தமையும், அவர்கள் மொழிகள் இன்னும் முந்திய நாள் முதற்கொண்டே திருத்தமுற்று முதற் சொற்களும் அமைதிகளும் சிதையாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளமையும் தான். சித்திய இனத்தவர் நாடோடிகளாய்த் திரிபவராயிருந்தமையும், ஆரியர் ஒழுங்கான குடிவாழ்க்கை உடையவராயிருந்தமையும் இதற்கு அடிப்படைத் தூண்டுதல்களாயிருந்திருக்க வேண்டும். காரணம்