பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ராபர்ட் கால்டுவெல்

மொழிநூல்முறை வழுவாது, கிரீக்கு மொழியின் அருமை பெருமைகளைப் பிற உயர்தனிச் செம்மொழிகளுடன் ஒப்புமைப்படுத்திக் காட்டிய திறமையைக் கண்டு கால்டுவெல் அளவிலா வியப்பெய்தினார். வியப்பு விருப்பாயிற்று; விருப்பு இவர் தம் உள்ளத்தை அத்துறையில் வெள்ளம் போல் ஈர்த்துச் செல்வதாயிற்று. இதுவே, இவர் பிற்காலத்தில் தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிப் பெருமை யெய்துவதற்கு அடிப்படையாயிற்று.

இந்நிலையில் தென்தமிழ்நாட்டில் கிறித்து சமயப் பணி செய்யத்தக்க அறிஞரொருவரை இலண்டன் சமயத்தொண்டர் சங்கத்தினர் நாடினர்; நாட்டம் இயல்பில் கால்டுவெல் மீது சென்றது. கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிய இவரையே அச்சங்கத்தினர் தேர்ந்தனுப்பினர். ஆர்வத்துடன் ஒப்புக்கொண்ட இளைஞர் உடனே கப்பலேறினர். அக்காலம் கப்பல் இங்தியா சேர நான்கு திங்கள்களாகும். இந் நெடுங்காலத்தை வீணாக்கக் கருதாத நம் இளைஞர் அக்கப்பலிலேயே இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த பிரெளன் என்னும் ஒருவருடைய நட்பைத் தேடிக்கொண்டார். பிரெளன் சென்னை அரசாங்கத்தைச் சேர்ந்தவர்; ஆந்திரமும், ஆரியமுங் கைவந்தவர். அவருடன் நாடோறும் நன்கு பழகி, கால்டுவெல் முறையாக ஆரியம் பயின்றார்.

1838-ஆம் ஆண்டில் கால்டுவெல் முதன்முதல் சென்னை வங்கிறங்கினார். அந்நகரில் தமிழ்ப்புலமை வாய்ந்து பெருஞ்சிறப்புடன் விளங்கிய துரூ என்னும் ஆங்கிலேய அறிஞருடன் இவர் மூன்றாண்டுகள்வரை உறைந்து வருவாராயினர். அம்மூன்றாண்டுகளிலும் அப்பெரியாரிடம் இவர் முறையாகத் தமிழ் பயின்று வந்தார். சென்னை நகரில் அக்காலம் சிறந்து விளங்கிய தமிழறிஞர்களாகிய உவின்சுலோ, போப், பவர், ஆண்டர்ஸன், முதலியோர் நட்பும் இவருக்குக்