பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மூலமொழியின்......... மொழி எது ?

131

மிகுதியும் இருப்பதும் தமிழின் பழைமையைக் காட்டுவதாகும். (எ - டு.) திராவிட மொழியின் சுட்டுக்களில் அ தொலைவையும் இ அண்மையையும் காட்டுபவை. இவற்றுடன் பால் உணர்த்தும் விகுதியும், இடையே உடம்படு மெய்யாகிய வகரமும் வர அவன், இவன் என்னும் இடப்பெயர்கள் அல்லது சுட்டுப் பெயர்கள் ஏற்படுகின்றன. இவற்றிற்குச் சரியான தெலுங்குச் சொற்கள் எங்ஙனம் அமைந்துள்ளன என்று பார்க்கலாம். தமிழின் அன் விகுதிக்குச் சரியான தெலுங்கு விகுதி டு, உடு, அல்லது, அடு ஆகும். எனவே, தமிழில் அ + வ் + அன் என்பதற்கும், இ + வ் + அன் என்பதற்கும் சரியாக, தெலுங்கிலும் அ + வ் + அடு (அவடு), இ + வ் + அடு (இவடு) என்ற புணர்ப்பு உருவை எதிர்பார்க்கலாம்; ஆனால் இன்றைத் தெலுங்கிலுள்ள சொற்கள் ’வாடு’ (= அவன்) வீடு (= இவன்) என்பவையாம். இச் சொற்கள் வந்தமை எப்படி? தெலுங்கு இலக்கணத்தின் ஒலியியல் அமைதிப்படி, முதலில் சுட்டு அகரமும் இகரமும் இரண்டாம் உயிரைத் தம்மினமாக்கிய பின் தாம் இறந்துபட்டன. இறந்துபட்ட உயிரின் மாத்திரை பின் உயிருடன் கூட்டப்பட்டு உயிர் நீள்கின்றது. இங்ஙனம் பெரிதும் மாறுதலடைந்த தெலுங்கு வடிவங்கள் தமிழ் வடிவங்களுக்குப் பிந்தியவை என்பது தெளிவு. மிகப் பழைய இலக்கியத் தெலுங்கில்கூட இவ் வடிவே காணப்படுவதால் தெலுங்கில் இலக்கியச் சார்பான திருந்திய மொழி ஏற்பட்டது. இம் மாறுதலுக்குப் பின் என்றும், அதிலிருந்தே தெலுங்கு இலக்கியமொழி தமிழ் இலக்கியமொழிக்குப் பிந்தியதென்றும் ஏற்படுகின்றன.

5. தமிழில் காணப்படும் வடமொழித் திரிபுகள் (தற்பவங்கள்) பிற மொழிகளிலுள்ள வடமொழிக் திரிபுகளை விட எவ்வளவோ சிதைந்திருக்கின்றமையால் அவற்றின்