பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மூலமொழியின்......... மொழி எது ?

133

கண நூல்களும், நிகண்டுகளும் எழுதப்பட்டமையும் இக் காலத்தேதான். இக்காலத்தில் வழக்காற்றில் வந்த வட சொற்கள் தமிழ் ஒலிப்பியலுக்குத் தகுந்தபடி மாற்றப்பட்டு விளங்குகின்றன. (எ-டு) வடமொழி லோக - தமிழ் உலகு; வடமொழி ராஜா - தமிழ் அரசு.

தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் காணப்படும் வட சொற்கள் அனைத்துமே பெரிதும் மேற்கூறிய இரண்டு காலப் பகுதிகளிலும், அதிலும் சிறப்பாக முதலிற் கூறப்பட்ட அண்மைக் காலப் பகுதியிலேயே, வந்திருக்கவேண்டும் என்னலாம். எப்படியும் அவை இக்காலப் பகுதியில் வந்த தமிழ்மொழியின் வட சொற்களைப் பெரிதும் ஒத்தவை என்பதில் ஐயமில்லை. இவற்றில் காணப்படும் மாற்றத்தின் அளவை ஒட்டி இவை இயற்கை வரவுகள் (தற்சமம்) திரிபுகள் (தற்பவம்) என இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இயற்கை வரவுகள் வட மொழியிலும் தாய் மொழியிலும் ஒரே உரு உடையன. திரிபுகள் என்பவை திராவிட மொழியின் ஒலிப்பியலை ஒட்டி மாறுதல் பெற்று உரு மாறியவை. இயற்கை வரவுகளுள் பெரும்பா லானவை பிற்காலத்திலேயே புகுந்திருக்கவேண்டும். ஏனெனில், அவை வட மொழியின் எழுத்துக்கள் அனைத்தும் திராவிட மொழிகளில் புகுத்தப்பட்ட பின்னர் பார்ப்பனரால் வடமொழி ஒலிப்புத் தவறா வண்ணம் எழுதப்பட்டவை யாகவே காணப்படுகின்றன என்க. திரிபுகள் என்பவை வட மொழியிலிருந்து நேரில் கொள்ளப்பட்டவை யல்ல; பண்டைய பேச்சு மொழியாகிய பாகதங்களிலிருந்தோ, வட நாட்டில் பிற்காலத்தில் வழங்கப்பட்ட கெளரிய மொழிகளிலிருந்தோ எடுக்கப்பட்டவையே என்று தெலுங்கு, கன்னட இலக்கண அறிஞர்கள்தாமே ஒப்புக்கொள்கின்றனர்.