பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

அதிலும் பழங்காலக் கல்வெட்டுக்களாயின், வடமொழியிலேயே காணப்படுவது குறிப்பிடத் தக்கதாம். வடமொழியின் சிறப்பொலிகளுக்குக் தகுந்த எழுத்துக்கள் ஆங்காங்குப் புதியனவாக வகுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றிற்கு நேர்மாறாக, தமிழ் நாட்டிலுள்ள பழங்கல்வெட்டுக்கள் எல்லாம் தமிழ்மொழியிலேயே உள்ளன. பண்டைய பாண்டிநாட்டைச் சேர்ந்தவையான தென் திருநெல்வேலி, தென் திருவாங்கூர்ப் பகுதிகளிலுள்ள கல்வெட்டுக்களின் படிவங்கள் அத்தனையையும் துருவிப்பார்த்தும் 14-ஆம் நூற்றாண்டுக்கு முந்தியதாக ஒரு வடமொழிக் கல்வெட்டுக் கூட அகப்படாதது குறிப்பிடத்தக்கது. இக்கல்வெட்டுக்கள் பெரும்பாலும் கோவில்களின் சுவர்களிலும், தூண்களிலும், நிலைக்கற்களிலும், நிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் 150-க்கு மேற்பட்டவற்றின் படிவங்கள் எம்மிடமுள்ளன. இவற்றுள் காலத்தால் மிகப் பிந்தியவை திராவிடப் பார்ப்பனர் வடமொழியை எழுதப் பயன்படுத்தும் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன ; முக்கியவையோ இன்றைய தமிழ் எழுத்துக்களிலும் பழைமையானதோர் எழுத்தில் எழுதப்பட்டுள்ளன. இப்பழந்தமிழ் எழுத்துப் பழந்தமிழ் நாட்டிற்கும், பழைய மலையாள நாட்டிற்கும் பொதுவானதொன்றாகக் காண்கிறது. கொச்சியில் யூதர்களுக்கும், திருவாங்கூரில் சிரியக் கிறிஸ்தவர்களுக்கும் வழங்கப்பட்ட பட்டயங்கள் இப்பழந்தமிழ் எழுத்திலேயே எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் வட மலையாளத்திலுள்ள முகம்மதியர் இவ்வெழுத்தினையே சில மாறுதல்களுடன் எழுதிவருகின்றார். இந்த எழுத்து இக்காலத் தெலுங்கு-கன்னட எழுத்தினுடனும், இலங்கையிலும் கீழைஇந்தியத் தீவுகளிலும் இதுகாறும் இன்னமொழி என்று விளக்கமுறுக சில கல்வெட்டுக்களின் எழுத்