பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராபர்ட் கால்டுவெல்

13

றார் ...... நலமலிந்த மக்கள் வாழும் நாசரத்தென்னும் நகரை நண்ணினார். அந்நகர மக்கள் விருப்பத்திற்கிணங்கி ஆலயத்தில் ஒரு விரிவுரை நிகழ்த்தினார்...... ...அருகிருந்த முதலூரில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை அரியதோர் விரிவுரை செய்தார். அப்பால், இடையன்குடியை நோக்கிப் புறப்பட்டார்; காதவழி தூரத்தில் அமைந்திருந்த அவ்வூரை இராப்பொழுதில் வந்தடைந்தார்.”

சமயத்தொண்டும், தமிழ்த்தொண்டும் புரியப் போந்த நல்லறிஞர் தம் தொண்டிற்கு இடமாக அமைந்த இடையன்குடியை இவ்வாறு சென்றடைந்தார். இவ்வழிநடையினால் சோழநாட்டின் நிலவளமும், தரங்கம்பாடியின் கடல்வளமும், நீலகிரியின் மலைவளமும், பாண்டிநாட்டின் தமிழ்வளமும் ஐயர்தம் உள்ளத்தில் நன்கு பதிந்தன. தமிழ்நாட்டில் திகழும் ஊர்கள் பலவற்றையும் நேராகச் சென்று கண்டமையால், தமிழ்மக்களின் பழக்க வழக்கங்களும், தமிழ்மொழியின் பல்வளங்களும், அதனோடு தொடர்புடைய பிற திருந்தாமொழிகளின் நுட்பங்களும் இவர்க்கு நன்கு விளங்கின. இவை பின்னர் இவர் எழுதிய ஒப்பற்ற ஆராய்ச்சி நூலாகிய ஒப்பிலக்கண நூலைக் திறம்பட எழுதுதற்குப் பேருதவியாயின.

திருநெல்வேலித் தேரியிலமைந்துள்ள வெப்பமிகுந்த இடையன்குடியை அடைந்த பெரியார் அவ்வூர் ஒரு பெரிய குப்பைக் காடாக இருக்கக் கண்டார்; தாறுமாறாகக் கிடந்த அவ்வூர்த் தெருக்களையும், தெருக்களிலுள்ள வீடுகளையும் முறைப்படுக்கிக் திருத்தியமைக்கத் தூண்டுதலளித்தார். தமக்குக் குடியிருக்க அமைந்த வீட்டை நன்கு செப்பனிட்டு, பிறரும் அவ்வாறே தத்தம் வீட்டினைச் செப்பனிட்டு அமைக்கத் தூண்டினர்.

இந்நிலையில், 1843-ஆம் ஆண்டில், இவருக்குத் திருமணம் நடைபெற்றது. நாஞ்சில் நாட்டு நாகர்கோயிலில் கிறித்-