பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

ராபர்ட் கால்டுவெல்

ரியற்றிய ஏனைய நூல்கள் “திருநெல்வேலிச் சரித்திரம்” “தாமரைத் தடாகம்”, “ஞானஸ்நாநனம்”, “நற்கருணை”முதலியனவாம்.

இவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்து, அறம் பல புரிந்து, செயற்கருந் தொண்டுகளைச் செய்து முடிக்க அருந்திறற் பெரியார் 1891-ஆம் ஆண்டு தள்ளாமையை முன்னிட்டுப் பணியினின்று நீங்கி ஓய்வு பெற்றுக் கோடைக்கானல் மலையில் வாழ்ந்துவருவாராயினர். ஆனால், நெடுநாள் இவர் அவ்வாறு வாழ்வதற்கில்லை. அதே ஆண்டில் ஆகஸ்டு மாதம் 28-ஆம் நாளன்று ஐயர் இறைவன் திருவடி சேர்ந்தார். இவருடைய உடல் இடையன்குடிக்குக் கொண்டுபோகப்பட்டு, இவரால் அங்குக் கட்டப்பட்டிருந்த ஆலயத்தில், அடக்கஞ் செய்யப்பட்டது.

[1]“கால்டுவெல் ஐயர் தமிழகத்தையே தாயகமாகக் கொண்டார். தென் தமிழ் நாடாகிய பொருனை நாட்டில் ஐம்பதாண்டுக்கு மேலாக வதிந்து அருந்தொண்டாற்றினார். ஏழைமாந்தர்க்கு எழுத்தறிவித்தார். சமய ஒழுக்கத்தைப் பேணக் கருகித் திருச்சபைகள் நிறுவினார். தூர்ந்துகிடந்த துறைகளைத் துருவினார். திருநெல்வேலிச் சரித்திரத்தை வரன்முறையாக எழுதினார். தென்மொழியாய தமிழொடு தென்னிந்தியாவில் வழங்கும் பிறமொழிகளை ஒத்துநோக்கித் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்னும் உயரிய நூலை ஆங்கிலத்தில் இயற்றி”த் திராவிட மொழிகளுக்குப் புத்துயிரளித்தார். ஐயர்தம் பெருமை அளவிடப்போமோ!



  1. கால்டுவெல் ஐயர் சரிதம்—திரு. ரா. பி. சேதுப்பிள்ளையவர்கள் பி.ஏ., பி.எல்.