பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிட மொழிகள்

189

பார்க்கினும் அவ்வீரின மொழிகட்கிடையே ஒற்றுமை யன்றி வேற்றுமைகளே மிகுந்து கிடக்கக் காணலாம். ஒலிப்பு முறையில் வேறுபாடு; பால் குறிப்புமுறையில் வேறுபாடு; வேற்றுமை ஏற்கும் முறையில் வேறுபாடு; எண் முறையமைப்பில் வேறுபாடு ; இன்மை, அன்மை, மறுதலை என்ற எதிர்மறையைக் குறிப்பதில் வேறுபாடு; சொற்கூட்டத் தொகுதியிலோ அளவற்ற வேறுபாடு! அவற்றிடையே காணப்படும் ஒற்றுமைகள் இரண் டொன்றும் உண்டாலோவெனின், அவை யிரண் டொன்றும், உலகமெங்கனும் பரவியுள்ள பன்மொழித் தொகுதிகளுள் ஒன்றற் கொன்றினிடையே பொதுப்படக்காணப் பெறும் ஒற்றுமைப் பெற்றிகளே யாமென விடுக்க.

திராவிட மொழியினத்தைக் குறித்து இனி, நோக்குவாம்: இவ்வினத்தைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவிலுஉம், மத்திய இந்திய மலைநாடுகளிலும் பெருவாரியாக வழங்கி வருவனவாம். அவற்றுள் இரண்டு மொழிகள் இவ்வெல்லையுங் கடந்து வடக்கே சென்று, சோட்டாகாகபுரியிலும், சந்தாளபர்கணாஸ்[1] பகுதிகளிலும் முண்டா மொழியினங்களோடு உடன் வழங்கியும், இந்தியப் பெருநாட்டின் வட மேற்கு மூலையிலுள்ள பலூச்சிஸ்தானத்திடையே பிராகுவி என்ற பெயரால் வழங்கியும் இன்றளவும் இருந்து வருகின்றன. வடமொழிவாணர் பலருக்கு மேற்குறித்த பிராகுவி என்ற திராவிட மொழியிருந்ததாகவே தெரிந்ததில்லை. ஆந்திரபாஷா,[2] திராவிட பாஷா[3] என்ற இரண்டு பிரிவுகளே அவர்களறிந்தன ; அவற்றுள் ஆந்திரபாஷா என்பது இப்போதைய தெலுங்கு மொழி; பின்னையதான திராவிட பாஷா என்பது தெலுங்கு ஒழிந்த ஏனைய மொழிகள். இப்பிரிவு


  1. 1. Santal Parganas.
  2. 2. Andhra-bhasha
  3. 3. Dravida-bhasha.