பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

கிரீயர்ஸன் மொழியாராய்ச்சிக் குறிப்புக்கள்




மலையாளம் :

மலையாளம் என்பது தமிழிலிருந்து கி. பி. 9-ஆம் நூற்றாண்டிற் கிளைத்துப் பிறந்த புதுமொழியாகும். மேற்குக் கடற்கரையிலுள்ள மலையாள நாட்டிற் பயின்றுவருவது இம்மொழியே. எழுத்து வழக்கில்லாத ஏரவம் என்ற ஒரு மொழி இம்மலையாளத்திலிருந்து கிளைத்துக் குடகு நாட்டின் ஒரு பகுதியில் இன்றும் பேசப்பட்டு வருகின்றது. மலையாள மொழியில் இக்காலத்திற் பெருவாரியாக வட சொற்கள் கலந்து விட்டன; பால் விகுதிகளைப் பயன்படுத்திவரும் முறையை மலையாள மொழி ஏறக்குறையப் புறக்கணித்து விட்டதென்றே சொல்லலாம். இம் மொழியிலும் நூல்கள் எண்ணிறந்தன எழுதப்பட்டுள்ளன. தென்னிந்தியாவிற் பண்டு வடமொழியை எழுதக் கற்பித்துக்கொண்ட கிரந்த எழுத்துக்களையே மலையாளமொழி கையாண்டுவருகிறது.

கன்னடம்:

மைசூரிலும், அதனை யடுத்த மலைப் பகுதிகளிலும், பம்பாய் மண்டிலத்தின் தென் மூலையிலும் கன்னட மொழி பேசப்பட்டு வருகிறது. பண்டைப் பெருநூல் வளம் அதற்குமுண்டு. அந் நூல்கள் தெலுங்கு எழுத்துக்களுக்கு நெருங்கிய தொடர்புடைய ஒருவகை எழுத்துக்களால் இயன்றவை. எழுத்து வழக்கில்லா வடகு, குறும்பு என்ற இரு மொழிகள் இக் கன்னடத்திலிருந்து கிளைத்துள்ளன. இவ் விரண்டும் நீலகிரிப் பகுதிகளில் பேசப்பட்டு வருகின்றன. குடகு நாட்டிற் பயின்றுவரும் குடகு மொழியும் இதன் கிளை மொழியேயென்று கூறுவாருமுளர். துளுவ மொழி பயிலும் தென் கன்னடக் கோட்டத்திற்கும், மைசூர்ப் பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் இக் குடகுமொழி பயின்று வருகிறது.