பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

அவ்வக்காரியங்கட்கு யூதர்களால் எபிரேயம் கையாளப்பட்டு வருகிறது. தென்னிந்தியப் பெருநகரங்களில் வசிக்கும் குஜராத்தி வட்டிக்கடைக்காரர்களாலும், பார்ஸி வணிகர்களாலும் குஜராத்தியும் மராத்தியும் பேசப்பட்டு வருகின்றன. கோவாவிலுள்ள போர்த்துக்கேசியர்கள் மட்டும் போர்த்துக்கேசிய மொழியைப் பேசிவருகிறார்கள்; ஏனைய இடங்களிலுள்ள போர்த்துகேசியர்கள் விரைவில் தம் மொழியை மறந்து ஆங்கிலத்தைப் பயின்றுவருகிறார்கள். புதுச்சேரி, காரைக்கால், மாஹி என்ற பிரெஞ்சுநகரங்களிலுள்ள பிரெஞ்சு அரசியற் சிப்பந்திகளாலும், அவர்கள் வழிவந்தவர்களாலும் பிரெஞ்சு மொழியே பேசப்பட்டுவருகிறது.

ஆங்கிலேயருக்குச் சொந்தமான இந்தியப் பகுதிகளெங்கணுமுள்ள ஆங்கிலேயர்களாலும், ஆங்கிலோ இந்தியர்களாலும், யூரேஷியர்களாலும் பேசப்பட்டுவருவது ஆங்கிலமே. வாணிகத்துறையிலும் நீதிமன்றங்களிலும், அரசியற் பணித்துறைகளிலும் ஆங்கிலம் வரவர இந்தியர்களாலும் மிகுதியாகக் கையாளப்பட்டு வருகிறது. சென்னை மாகாணத்தைப் பொறுத்தமட்டில், பண்டு வடமொழி எந்த உச்ச நிலையை எய்தியிருந்ததோ அந்த அளவிற்கு இப்பொழுது ஆங்கிலம் உயர்தரக் கல்வி பெறும் மொழிக் கருவியாக இருந்து வருகிறது. எனினும், இவ்வாங்கிலமோ, வேறெந்தப் புற மொழியோ எக்காலத்திலேனும் தென்னிங்திய உண்ணாட்டு மொழியாக மாறிவிடக்கூடும் என்று நம்புவதற்கு எட்டுணையும் வழியில்லை. ஆற்றலிலும் எண்ணிக்கையிலும் மிக்கவர்களாகக் கருதப்படும் ஓரினத்தாரின் மொழியாகிய வடமொழியைச் சென்ற 2,000 ஆண்டுகளாக எதிர்த்துநின்று போராடி வருவனவாய திராவிடமொழிகள், மற்றெந்த அயல் மொழியும் தம்மிடைத் தலைசிறவாதபடி எதிர்த்து நின்று தடுத்துக்கொள்ளும் என்று எளிதில் நம்பலாம்.