பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨. “திராவிட மொழிகள்” என்று வகுத்துக்கொண்டதேன்?

தென்னிந்தியாவில் வழங்கும் மொழிகள் பலவுந் தமக்கெனத் தனித்தனி ஒரு பெயருடையனவேனும் அவையனைத்தையும் ஓரினப்படுத்தி, அவ்வினத்திற்குக் குறியீடொன்று கொடுத்து, அக்குறியீட்டை யெடுத்தாளுதல் ஒப்பிலக்கண முறைக்கு இன்றியமையாத தொன்றாகும். தென்னிந்திய மொழிகளை இலக்கண வகையால் நோக்குமிடத்து அவையனைத்திற்கும் தனிப்பட்ட பொது அமைப்பொன்று அடிப்படையாக இருப்பது காணப்படும். இப்பொதுச் சிறப்பினாலும், மொழிக்கு இன்றியமையாத வேர்ச்சொற்கள் பலவற்றைப் பொதுப்படையாகவும் பெருவாரியாகவும் தம்முள்ளே இம்மொழிகள் கொண்டுள்ளமையாலும் இம்மொழிகளெல்லாம் ஓரின மொழிகளே யென்பது எளிதிற் பெறப்படும்.

மேனாட்டு மொழியாராய்ச்சியாளர்கள் தொடக்கத்தில் இத்தென்னிந்திய மொழிகளைத் தமிழ்” என்றே இனமொழிக் குறியீடுகொடுத்து வழங்கிவந்தார்கள். ஒரு வகையில் இது சரியே. தென்னிந்திய மொழிகளுள் தொன்மை மிகுந்ததும், திருத்தம் பெற்றதுமாகிய மொழி தமிழ்மொழியே; தென்னிங்கிய மொழியினத்திற்குரிய தனிச்சிறப்புக் களையும் அடிப்படையமைப்பையும் உரிமையோடு கொண்டிலங்குவது தமிழ்மொழியே. ஆகவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மொழியை அதன் இனத்தைச் சுட்டும் வகைக் குறிமொழியாகக் கொள்வதில் தவறேது மில்லையாயினும், தெளிவு கருதித், தமிழ் மொழியையும் அம்மொழி பேசும் தமிழ்மக்களையுங் குறிப்பதற்கு மட்டும் தமிழ் என்னும் குறியீட்டை வழங்குவதே சால்புடைத்தாம். அற்றாயின்,