பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—தமிழ்

13

இவ்விரு ஊர்களின் பெயரொலிகளில் ஒற்றுமை யிருப்பது காணப்படும். “சதுரங்கம்“ என்ற சொல் சதுரையாகக் குறுகி ஆங்கிலேயரால் சத்ராஸ் என்று திரித்து வழங்கப்பட்டது போலும். இனி மந்தராஜ்பட்டினம் என்பதன் திரிபே மதராஸ் என்று கூறுவோரின் கூற்றுக்கு யாதொரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

தமிழ்

தமிழ் என்பதிலுள்ள ழகர வொற்றை ளகர வொற்றாகத் திரித்துத் “தமிள்“ என்று ஒருசிலர் வழங்குவர். ஐரோப்பியர் முதலில் அதைத் “தமூல்“ என்றே புகன்று வந்தனர். பிரெஞ்சுக்காரர் இவ்வாறாகவே எழுதிவைத்தனர். ஆனால் அவர்களுக்குமுன் போந்த போர்த்துகேசியர்கள் தமுல் என்றோ தமிள் என்றோ கூறாமல் “மலபார்” என்றே தமிழ்மொழியைக் குறித்துவந்தனர். புதுச்சேரியிலிருந்த பிரெஞ்சு அரசாங்க ஆட்சியாளரான டியூப்ளேயின் திவானாகவிருந்தவர் ஆனந்தரங்கப் பிள்ளை என்பார்; அவருக்குப்பின் திவானாகவந்த அவ் ஆனந்தரங்கப் பிள்ளையின் மருகருக்கு, கி. பி. 1766-ஆம் ஆண்டில் பிரான்சு மன்னர் பதினான்காம் லூயி என்பார் “மலபார் (தமிழ்த்) தலைவர்“ என்ற பட்டத்தை வழங்கியது போர்த்துகேசியர் வழக்கை யொட்டியே போலும்.

இதனையே “சமஸ்கிருத பிராகிருதமொழி ஆராய்ச்சி“ எழுதிய கோல்புருக் என்பவர், “சென்னை மண்டிலத்தின் மொழி தமிழ்மொழியே; ஆனால் அதனை ஐரோப்பியர் ‘மலபார்' என்று கூறுகின்றனர்“ எனக் குறித்துள்ளார். கி. பி. 1577 அல்லது 1579-ல் மலையாளக் கரையிலுள்ள அம்பலக்காடு என்ற ஊரில் முதன்முதலாக அச்சிடப்பட்ட தமிழ்நூலின் மொழியை அந்நூலுக்குடையார் "மலவார்