பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

ஆகவே, இவற்றாற் பாண்டிய நாட்டின் ஆதிக்கம் நெடுந்தொலை பரவியிருந்ததென்பது எளிதில் ஊகிக்கப்படும்.

இனி, அகஸ்டஸ் என்ற உரோம் நாட்டு மன்னனுக்கு இந்தியாவிலிருந்து தூதனுப்பியவன் வடநாட்டுப் போரஸ் அல்லனென்பதும், அவன் தென்னாட்டுப் பாண்டியனே என்பதும் உறுதியே. சென்னைப் பொருட்காட்சிச் சாலையில், கிளாடியஸ் என்னும் உரோம் நாட்டு மன்னன் பிரிட்டன் காட்டை வென்றதற்கு அறிகுறியாக வெளியிட்ட காசு ஒன்று மதுரைக் கோட்டத்திற் கிடைத்ததாக எடுத்துச் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. ஏரியன் முடி மன்னர்களில் ஒருவரான [1]வேலன்ஸ் என்பானின் காசு ஒன்று வைகையாற்றிற் கிடைத்ததாக [2]சர். எம். இ. கிராண்ட் டஃப் என்பார் எழுதியுள்ளார். இவற்றால் பாண்டிய நாட்டிற்கும் ஐரோப்பாவிற்கும் பண்டைக் காலத்திற் றொடர்பு இருந்துவந்ததென எளிதிற் புலப்படும்.

வடமொழிப் பாண்ட்ய என்ற சொல் தமிழிற் பாண்டியன் என்று எழுதப்படுகிறது. இதுவே குறுகிப் பாண்டி என்றும் எழுதப்படுகிறது. தமிழிலும் மலையாளத்திலும் வழங்கும் பண்டு என்ற சொல்லிலிருந்து பாண்டியம் என்ற சொற் பிறந்திருக்கக்கூடும் என்று கொள்வதற்கில்லை. பாண்டவர் தந்தையின் பெயரான பாண்டு என்னும் வடமொழிச் சொல்லடியாகவே இது பெறப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால் தமிழாராய்ச்சியறிஞர்களெல்லாம். இது பண்டு என்னும் தமிழ் வேர்ச் சொல்லிலிருந்து பெறப்பட்ட தொன்றாகவே வற்புறுத்திக் கூறுகின்றனர். பாணினிக்குப் பின்வந்த [3]காத்தியாயனர் என்பார் பாண்டுவின் வழியினரே பாண்டியர் என்று கொண்டிருப்பதாகப் [4]பேராசிரியர் மாக்ஸ்முல்லர் குறிப்பிடுகிறார்.


  1. The Arian Emperor Valens
  2. Sir M. в. Grant Duff
  3. Katyayana
  4. Professor Max Muller