பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

கரையிலிருந்த[1] "நெல்குன்றம்” என்ற சிறந்த துறைமுகப் பட்டினம் தமிழ் மூவேந்தர்களுள் தலைசிறந்த மதுரைப் பாண்டிய மன்னர்தம் ஆட்சிக் குட்பட்டது என்று குறித்துப் போந்தமை இக் கொள்கையை அரண் செய்வதாகும். மலையாள மொழியின் பண்டை இலக்கியங்க ளெல்லாம் வட மொழியை விடத் தமிழ் மொழியையே பின்பற்றி வந்துள்ளனவாகக் காணப்படுகின்றன என்று டாக்டர் குண்டெர்ட் கூறுவதும் அதனையே தெளிவுறுத்தும். தமிழ் முதலெழுத்துக்களாகக் கணக்கிடப்படும் உயிருமுடம்புமா[2] முப்பதெழுத்துக்களுக்கும் புறம்பான பிற எழுத்துக்களைப் பண்டை மலையாள இலக்கியங்கள் கையாளாமல் ஒதுக்கி வந்துள்ளன என்றும், அவ் விலக்கியங்களிலுள்ள வரிவடிவமோ தமிழ்நாட்டில், அதிலும் தென்பாண்டி நாட்டில், கல் வெட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த வட்டெழுத்துக்களைப் போன்றிருந்த தென்றும், குண்டெர்ட் பெரியார் கூறியுள்ளார். மலையாள மொழியின் முதற் செய்யுளிலக்கியமாகக் கருதப்படுவது ”இராம சரிதம்” என்பதேயாம். இது சில நூற்றாண்டுகட்கு முன்பே எழுதப்பட்ட தாகும். எனினும் இதன்கண் வடமொழி எழுத்துக் கலப்புக் காணப்படவில்லை. யூத பட்டயங்களிலும், சிரிய பட்டயங்களிலுங் காணப்படும் இலக்கண அமைப்பையே உடையதாகவும் இஃது இருக்கின்றது. இதை நோக்கும்போது மலையாள மொழியும் அதன் பிற்கால இலக்கியங்களும் எத்துணை விரைவில் வடமொழி மயமாக மாறிவிட்டன என்பது வியப்பையே அளிப்பதாகும். இத்துணே மாறுதலும் சென்ற இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக் குள்ளாகவே ஏற்பட்டதாகும். இரண்டு அல்லது மூன்றே நூற்றாண்டு எனினும்


  1. Nelkynda
  2. முப்பத்திரண்டென்றார் கால்டுவெல்