பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—மலையாளம்

31

எத்துணை வடமொழிக் கலப்பு!! தமிழில் எவ்வளவுக்கெவ்வளவு வடமொழிக் கலப்புக் குறைவாகக்காணப்படுகின்றதோ, அவ்வளவுக் கவ்வளவு மலையாளத்தில் மிகுதியாகக் காணப்படுகின்றது!!! மேலும், அதன் வரிவடிவமும், தமிழ் நாட்டில் வடமொழி எழுத்துக்களை எழுதக் கையாளப்படும் கிரந்த எழுத்துக்களின் வரிவடிவை யொட்டியே வகுக்கப்பட்டுள்ளதாகாகவும் கருதக்கிடக்கின்றது. ஆகவே, தமிழிலிருந்து ஒருசிறிது வேறுபட்டிருந்த மலையாளம் படிப்படியாக வேறுபாடுகள் மிக்கதாகி, தமிழின் கிளைமொழி யென்பது போய், உடன்றோன்றிய இனமொழியோ என்று கருதக்கூடியதொரு நிலையை எய்திவிட்டது. மலையாள மொழிக்குத் தமிழே தாய்மொழி என்பதில் யாதொரு ஐயமு மின்று; எனினும் மலையாள மொழி இப்பொழுதுள்ள நிலையை நோக்கில், தாயின் தொடர்பை நீத்துத் தனிப்பட்ட வேற்றுருவைக் கொண்ட மகளொருத்தியைப்போன் றாய்விட்டது. மலையாள மொழி என்றுதான் கூறுதல் வேண்டும். மலையாள மொழி தமிழின் கிளை மொழிதானா? ஆம்; கிளைமொழிதான். திசைகளைக் குறிக்க எழுந்த ’கிழக்கு’ ’மேற்கு’ என்ற இரு சொற்களைக் கொண்டே மேற்கண்ட வாறு விடை யிறுக்கலாம். கீழ் அல்லது அடி என்ற பொருளைக் குறிப்பது தமிழ்க் ”கிழக்கு” என்னுஞ் சொல்; அவ்வாறே மேல் அல்லது உயரம் என்ற பொருள் குறிப்பது தமிழ் ”மேற்கு” என்ற சொல். இச் சொற்களைக் கொண்டே இவை மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கீழ்ப்புறம் இருந்த தமிழ்நாட்டு மக்களிடையேதான் முதற்கண் தோற்றம் பெற்றுளவாதல் வேண்டும் என்று எளிதில் ஊகிக்கலாம்.

மேற்றிசையில் எங்கனும் ஓங்கி யுயர்ந்த மலைத்தொடர்! ஆகவே மேற்குத் திசை நோக்கிச் செல்ல வேண்டின் வரவர மேலேறித்தான் செல்லல் வேண்டும். கீழ்த்திசையில் எங்க