பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட மொழிகள்—குடகு

45


சென்னைக் கருகில் வசித்துவந்த குறும்பர்கள் என்ற நாடோடி இடையர்கள் துரத்தப்பட்டு அவர்களுடைய நில புலங்கள் துளுவ நாட்டு வேளாளர்களுக்கு வழங்கப் பெற்றன என்ற ஒரு பழங் கதையை எல்லிஸ் கூறியுள்ளார். சென்னையையும், சென்னையையடுத்து முள்ள சில குடும்பத்தினர் தங்களைத் துளுவ வேளாளர் என்று அழைத்துக்கொள்வது மேற்குறித்த பழங் கதைக் கொள்கையை வலியுறுத்துவதாகும். இருந்தாலும், துளுவ நாட்டிலிருந்து பலர் சென்னைக்கு வந்து குடியேறி யிருக்கக்கூடும் என்று கொள்வதற்கில்லை ; எனெனில், அவ்வாறிருந்தால் சென்னை நகரத் தமிழ் சிற்சில துறைகளிலேனும் துளுவ மொழிப் பண்புகளை ஏற்றுக்கொண்டிருத்தல் இயல்பாகுமாதலின். அவ்வாறு துளுவ மொழிக் கலப்பு இருப்பதாகத் தெரியவில்லை. சென்னை நகரத் தமிழ், சென்னை மண்டிலத் தமிழிலிருந்து வேறுபட்டுக் காண்பது தெலுங்கு மொழிக் கலப்பினாலேயே யன்றித் துளுமொழிக் கலப்பினாலன்று.


VI. குடகு

குடகுக்கு இலக்கியம் இல்லை. துளுவை ஒப்பக்கூட இதனைப் பண்பட்ட மொழி என்று சொல்ல முடியாது. எனவே, முதற்கண் இதனைத் தனி மொழியாகக் கணக்கிடாமல் கன்னடத்துள் அடக்கிக் கூறப்பட்டுவந்தது. இதன் உறவைப் பற்றிய ஆராய்ச்சி இன்னும் தெளிவு பெறவில்லை. டாக்டர் மோக்லிங்[1] என்ற ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் இது கன்னடத்தைவிடத் தமிழ் மலையாளம் இவற்றுக்கு அண்மையானது என்று கூறினர். திராவிடக் குழுவில் இஃது எதனுடன் நெருக்கமான உறவுடைய தென்று தெளிவாகத் தெரியவில்லை யாயினும், மேற்படையாக நோக்கின், இது


  1. Dr. Mogling