பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கால்டுவெல் ஒப்பிலக்கணம்

இதற்குக் காரணம் அவர் ஆரிய இனமல்லா மொழிகள் எல்லாவற்றையும் ஒரே குழு என்றும், அதில் தலைமையான மொழி தமிழ் என்றும் கொண்டதே யாகும். ஆனால் இலக்கண அமைப்பு, முதற்சொல் தொகுதி இவற்றை ஆராய்ந்து பார்த்தால் அவை திராவிட மொழிகளுடன் அத்தகைய நேரான இன ஒற்றுமை உடையவையாகத் தோற்ற வில்லை. அவர் காட்டிய சிற்சில இலக்கண அமைப்பு ஒப்புமைகள் இம் மொழிகளுக்குமட்டுமேயன்றிச் சித்திய இன மொழிகள் அனைத்திற்கும் பொதுப்பட்டவையாம். ஆதலால் அவற்றைத் திராவிடக் குழுவுடன் சேர்ப்பது துருக்கியக் குழுவுடன் சேர்ப்பதை யொப்பதேயாகும் என்க.

பலூச்சிஸ்தானத்தில் கெலத்துத் தொகுதியில் பேசப்படும் பிராகுவீ மொழி திராவிடச் சொற்கள் மட்டு மன்றித் திராவிட இலக்கண அமைப்புக்கூட உடையதாதலால், அது ஹாட்ஜ்ஸன் தமிழ்க்குழுவில் சேர்த்த நேபாள, பூதானத் தமிழ்மொழிகளைவிட, திராவிடக் குழுவுடன் சேர்க்கப்படுவதற்கு எத்தனையோ மடங்கு உரிமையுடைய தேயாகும். ஆனால் அதிலுங்கூடத் திராவிடப் பகுதி குறைவாகவும், பிற பகுதி மிகுதியாகவும் இருப்பதால், திராவிட ஒப்பியல் இலக்கணத்திற்கு உதவும் இடங்களில்மட்டும் அஃது எடுத்துக்காட்டப்படும்.

1911-ம் ஆண்டுக் கணக்கில் பிராகுவீ திராவிட மொழிகளுள் வைத்து எண்ணப்பட்டுள்ளது. அக் கணக்கின்படி பேசுவோர் தொகை 170,998 ஆகும். இது தவிர 236 பேர் பேசும் மல்ஹர்[1] என்பதொன்றும், 24,074 பேர் பேசும் கொலாமீ[2] என்பதொன்றும் திராவிட இனத்துள் சேர்க்கப்பட்டுள்ளன.


  1. Malhar
  2. Kolami