பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கால ஆராய்ச்சி பலர் திருக்குறளைப் பாராட்டிப் பாடிய பாக்களையும் பிற்காலத்தவர் திருவள்ளுவ மாலை என்னும் தலைப்பில் தொகுத்தனர் என்றே கருதுதல் பொருந்தும். அத் திருவள்ளுவ மாலையில் காணப்படும் பழம் புலவர்க்கு, வள்ளுவர் சம காலத்தவர் என்று கொள்ளுதலினும், அவர்க்கு முற்பட்டவராகக் கொள்வதே சால்புடையதாம். "புலவர் எவரும் தம் காலத்தவரால் தலைநின்ற தேவநாவலராய் மதிக்கப்படும் வழக்கம் யாண்டும் இல்லை. பெரும்பாலும் சமகாலத்தவரால் அவமதிப்பும், தாமியற்றிய நூலின் மெய்ப்பெரு வலியால் பிற்காலத்தவரால் மேம்பாடும் அடைவதே புலவர் உலகியல்பு. தெய்வப் பாவலராக வள்ளுவரைச் சங்கப் பழம் புலவர்கள் கூறுவதால், அவர்தமக்கு வள்ளுவர் நீண்ட காலத்துக்கு முற்பட்டவராகவும் அவர் அறநூலின் இறவாச் சிறப்பு அங்கீகரிக்கப்படுவதற்குப் போதிய அவகாசம் அக்குறளுக்கும் அதன் அடிகளைப் பாராட்டி எடுத்தாளும் சங்கப் பனுவல்களுக்கும் இடையே ஏற்பட்டிருத்தல் வேண்டும்." 4. கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த கெளடில்யர் இயற்றிய பொருள் நூலில் கண்ட சில செய்திகளும் திருக்குறள் பொருட்பால் பகுதிகள் சிலவும் கருத்தில் ஒன்றுபட்டிருத்தலால், திருவள்ளுவர் கெளடில்யரது பொருள் நூலைப் படித்திருக்கலாம் என்று ஒருசார் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இங்ங்னம் கொண்டு, திருவள்ளுவர் காலம் கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகட்கு உட்பட்டதாகலாம் எனக் கூறுகின்றனர்." 5. திருவள்ளுவர் தொல்காப்பியத்தை வரம்பாகக் கொண்டே திருக்குறளை இயற்றினார் என்பதற்குப் பல சான்றுகள் காட்டலாம். அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்க: 1. தொல்காப்பியர், 'அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று முதற் பொருள்கள் என்று கூறியுள்ளார். அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற் பொருட்கும் உரிய வென்ப" திருவள்ளுவர் இம்மூன்று முதற் பொருள்களை விளக்கவே திருக்குறளை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று முப்பாலாக வகுத்தமைத்தார். - அறத்தினால் பொருளை ஈட்டி, அப்பொருளால் இன்பம் நுகர்தலே இவ்வுலக வாழ்வின் பயன் என்பது பழந் தமிழ்ச் சான்றோர் கொள்கை. தொல்காப்பியர் இக் கொள்கையையே தம் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர் அதனையே பின்பற்றினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/51&oldid=793348" இலிருந்து மீள்விக்கப்பட்டது