பத்துப்பாட்டின் காலம் 59 அப்பெருமான் சிவபெருமானுக்கு மகனாதலின் என்க. கணவனான சிவபிரான் அருளாற் பிறந்த முருகன், அச் சிவபிரான் மனைவியான உமாதேவிக்கும் மகன் என்று உபசார வழக்காய்க் கூறுதல் பொருத்தமேயாகும். முருகனும் கடவுளர் பிறரும் புறநானூற்றில் (செ. 56) இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பாடிய நக்கீரர், அவனை நோக்கி, “நீ பகைவரை அழித்தலில் சிவனை யொப்பாய், வலிமையில் பலராமனை யொப்பாய்; புகழில் திருமாலை யொப்பாய்; முன்னியது முடிப்பதில் முருகனை யொப்பாய். இந்நால்வரும் ஞாலம் காக்கும் கால முன்பினை உடையவர்; தோலா நல்லிசை யுடையவர், என்று கூறியுள்ளார். இந்நக்கீரர் பாடலில் சிவன், பலராமன், திருமால், முருகன் ஆகிய நால்வரையும் சமப்படுத்தியுள்ளமை தெளிவு. திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரர், “மும்மூர்த்திகளும் தத்தம் தொழில் புரியும் தலைவராகும்படி முருகன் தோன்றினான் (வரி 162, 172-176) என்று பாடியுள்ளார். இதனால், முருகன் மும்மூர்த்திகளினும் மேலானவன் என்பது இந் நக்கீரர் கருத்தென்பது தெரிய வருகிறது. புறநானூற்றுப் பாடலில் (56), ஞாலம் காக்கும் கால முன்பின் தோலா நல்லிசை நால்வர் என்று நால்வரையும் சமநிலையினராகவே நக்கீரர் கூறியுள்ளார். அஃதாவது ஞாலங் காக்கும் கால முன்பும் தோலா நல்லிசையும் இந்நால்வர்க்கும் இயற்கையாகவே அமைந்துள்ளன என்பதை இப்பாடலில் நக்கீரர் குறித்துள்ளார். ஆயினும், திருமுருகாற்றுப் படையில் நக்கீரர், முருகன் தோன்றிய காரணத்தால் மும்மூர்த்திகள் தங்கள் தொழில் புரியும் தலைவர்களானார்கள், என்று கூறியுள்ளார். இங்ங்னம் முருகன் பிறந்த காரணத்தால் மும்மூர்த்திகள் தொழில் புரியும் தலைவர்களானார்கள் என்பதனால், அம் மும்மூர்த்திகளின் தலைமை செயற்கையாய் அமைந்தது என்பது தெரிகின்றது. "பலரும் புகழ்கின்ற அயன், அரி, அரன் என்னும் மூவரும் தத்தமக்குரிய தொழில்களை முன்பு போல நிகழ்த்தித் தலைவராக வேண்டித் தம்முடைய சீரிய படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் தொழில்களைப் பண்டு போலப் பெறுமுறையினைக் குறை வேண்டிச் சேர வந்து காணும்படி முருகன் தெய்வயானையாருடன் திருவாவிநன்குடியில் இருத்தலு முரியன்,
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/66
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை