பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கால ஆராய்ச்சி மேலும், ஆவி நன்குடி என்னும் பெயரே சங்க காலப் பாக்களில் இடம் பெறவில்லை என்பதும் இங்குக் கவனிக்கத்தகும். அயிரை மலையைப் பாடும்போது, அம்மலை கொற்றவைக்குரிய மலையெனச் சங்க காலப் புலவராற் பாடப் பட்டுள்ளது (பதிற்றுப்பத்து 79). இவ்வாறே பரங்குன்றமும், செந்திலும் முருகனுக்குரியனவாகப் பாடப் பட்டுள்ளன. பரணர் வரலாற்றுக் குறிப்பை அமைத்தே செய்யுள் பாடும் இயல்புடையவர். அவர் பேகனைப் பாடியுள்ளார். அப்பாட்டில் ஆவிநன்குடி பற்றிய பேச்சே இல்லை. அவர் காலத்தில் செந்திலைப்போலவும் பரங்குன்றம் போலவும் ஆவிநன்குடி முருகன் தலமாகச் சிறப்புற்றிருக்குமாயின், அவர் கூறாதிரார் என்பது உறுதி. இவை அனைத்தையும் நோக்கி, சங்க காலத்தில் ஆவிநன்குடி முருகனுக்குரிய ஒரு தலமாய் இருந்திருத்தல் இயலாது. என்று கருதுதல் பொருத்தமாகும். முடிவுரை இவை அனைத்தையும் நடுவுநிலையிலிருந்து ஆராய்ந்தால், திருமுருகாற்றுப்படையைப் பாடிய நக்கீரர் சங்க கால நக்கீரரின் வேறாவர்; காலத்தாற் பிற்பட்டவர் என்பது தெளிவாகும். 'திருமுருகாற்றுப்படை சங்க காலத்திற் பாடப்பட்டதாயினும், சைவ சமயத் தொடர்பு கருதிப் பதினோராம் திருமுறையிற் சேர்க்கப்பட்டது, என்று சிலர் கூறுவர். அங்ங்னமாயின், சங்க காலத்திலேயே முருகன்மீது பாடப் பட்டவை என்பது தெளிவாகத் தெரியும் எட்டுப் பரிபாடல்களும் அப்பதினோராந் திருமுறையிற் சேர்க்கப் படாமைக்குக் காரணம் யாது? திருமுருகாற்றுப்படை மட்டும் அத் திருமுறையில் சேர்க்கப்பட்டமைக்குக் காரணம் யாது? நெடுநல்வாடையில் உள்ள சொற்கள் சிலவும் சொற்றொடர்கள் சிலவும் திருமுருகாற்றுப்படையிலும் வருவதால், இப்பாடல்களையும் சங்க கால நக்கீரரே பாடியிருக்கலாம் என்பது சிலர் கருத்து. சிலப்பதிகாரச் சொற்களும் தொடர்களும் மணிமேகலையில் வருவதை அறிஞர் நன்கு அறிவர். எனவே, அவ்விருநூல்களையும் பாடியவர் ஒருவரே என்று சொல்லக்கூடுமோ? காலத்தால் முற்பட்டவருடைய சொற்களையும் தொடர்களையும் சிறந்த கருத்துக்களையும் பிற்காலப் புலவர் தம் பாக்களிற்கையாளுதல் இயல்பென்பதை அறிஞர் அறிவர். இவை அனைத்தையும் நோக்கத் திருமுருகாற்றுப்படை சங்க கால நக்கீரராற் பாடப்பட்டதன்று என்று கொள்வதே பொருத்தமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/69&oldid=793388" இலிருந்து மீள்விக்கப்பட்டது