பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகார காலம் 71 சாத்தனார் காலத்தவன் நெடுஞ்செழியன் என்ற பாண்டியன். அவன் பேராசிரியர் குறிப்பிட்டபடி அரசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் மட்டும் அல்லன், வட ஆரியர் படை கடந்த நெடுஞ்செழியன் என்றும் பெயர் பெற்றவன் என்று இளங்கோவடிகளே மதுரைக் காண்டத்தின் இறுதிக் கட்டுரையில் தெளிவாய்க் கூறியுள்ளார். இந்த ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் "உற்றுழி உதவியும்" என்று தொடங்கும் கல்வியின் மேம்பாடு பற்றிய செய்யுளொன்றைப் பாடியுள்ளான். அப்பாடல் புறநானூற்றில் (183) இடம் பெற்றுள்ளது. உண்மை இங்ங்னம் இருப்ப, இவன் கற்பனை அரசன் என்று பேராசிரியர் அவர்கள் எங்ங்னம் கூறத் துணிந்தார்களோ தெரியவில்லை. 5. சிலப்பதிகாரத்தில் கூறப்படும் பத்தினி வணக்கம் வேறு தொகை நூல்களில் கூறப்படவில்லை என்பது உண்மையே. சங்க நூற் பாடல்கள் முழுமையும் நமக்குக் கிடைக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். அழிந்துபட்ட பாடல்களுள் பத்தினி வணக்கம் பற்றிய பாடல்கள் இடம் பெற்றிருக்கலாம். இன்றுள்ள தொகை நூல்களில் பத்தினி வணக்கம் இல்லை என்பது கொண்டு, சிலப்பதிகார காலம் பிற்பட்டது என்று கூறுதல் எங்கனம் பொருந்தும்? சிலப்பதிகாரத்திற்குப் பின்பு செய்யப்பட்ட நூல்களிலும் இப்பத்தினி வணக்கம் குறிக்கப்படவில்லையே! அதனால் சிலப்பதிகாரம் தமிழ் நூல்கள் அனைத்திற்கும் காலத்தாற் பிற்பட்டது என்று கூறுதல் பொருந்துமா? 6. கண்ணகியால் குறிக்கப்பட்ட பத்தினிப் பெண்கள் பிற தொகை நூல்களில் இடம் பெறவில்லை என்பது உண்மையே. இன்னும் நம் நாட்டில் அறிவிலும் ஒழுக்கத்திலும் உயர்ந்தவர் பலர் உளர். எவரேனும் ஒருவர் அவர்களைப் பற்றிக் கூறினால் அல்லது எழுதினால் மட்டுமே அவர்களைப் பற்றி பிறர் அறிய வாய்ப்பு உண்டாகும். அவர்களை நேரில் அறியாதவர்கள் அவர்களைப் பற்றிப் பேசவோ, பாடவோ வாய்ப்பு உண்டாவதில்லை. இங்ங்னமே கண்ணகியால் அறியப்பட்ட பத்தினிப் பெண்டிர் பிறர்க்குத் தெரியாதிருக்கலாம். அவள் குறித்த அறுவருள் ஆதிமந்தி பற்றிய செய்தி பரணராலும் வெள்ளி வீதியாராலும் (அகம் 45) பல பாடல்களில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆதிமந்தி பரணர் ஒருவராலேயே பல செய்யுட்களில் (அகம்-76, 222, 236, 376, 396) பேசப்பட்டுள்ளாள். கரிகாலன் முன்னிலையில் கழாஅர்த்துறையில் நடனமாடியபோது அவள் கணவன் ஆற்று நீரால் இழுத்துச் செல்லப்பெற்றான் என்று பரணர் குறித்துள்ளார். அந்த ஆதிமந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/78&oldid=793408" இலிருந்து மீள்விக்கப்பட்டது