பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 107 வாகனங்கள் பிரமதேவன், திருமால், சங்கரர், இந்திரன், குபேரன் ஆகியோரின் வாகனங்களைக் குறிப்பிட்டுச் சொல்லியச் செய்யுள் இது. கடைமொழி மாற்று என்னும் வகையைச் சார்ந்தது. 'விதிக்காம்' என்பதனை முதலிற் கொண்டு பொருத்தி உரை காணவேண்டும். அன்னம் திருமாலுக் காங்கருடன் சங்கரற்காம் பன்னிடப மிந்திரற்காம் பார்க்குங்கால்-துன்னு மதவா ரணமளகை மன்னனுக்காம் பஞ்ச கதிசேர் புரவிவிதிக் காம். (167) "பிரமனுக்கு அன்னம் வாகனமாகும்; திருமாலுக்குக் கருடன் வாகனமாகும்; சங்கரற்குப் புகழ்மிக்க எருது வாகனமாகும்; சொல்லுமிடத்து, இந்திரனுக்கு மதம் நிறைந்த வெள்ளையானை வாகனமாகும் அளகாபுரி மன்னனாகிய குபேரனுக்குப் பஞ்சக தியும் பொருந்திய குதிரை வாகனமாகும்" விதி பிரமன், அளகை மன்னன் - குபேரன், இவன் வாகனங் களுள் ஒன்று குதிரை. பஞ்சகதி சேர் புரவி' என்றதனால், ஐந்து புலன்களின் ஒட்டத்தையுடைய புருஷவாகனத்தைக் குறித்த தாகவும் கொள்வர். ஆயிரம் வேணும் சிதம்பரத்துப் பொன்னம்பலத்திலே நடனஞ் செய்கின்ற கூத்தப்பிரானைக் கண்டு போற்றுகிறார் காளமேகப் புலவர். பெருமானின் கழல் விளங்கும் திருப்பாதங்களிலே தம்மை மறக்கின்றார் அவர் பெருமானை இவ்வண்ணமாக யாசிக்கவும் செய்கின்றார். காணத் தொழப்புகழக் கண்ணுங்கை யும்வாயும் சேணிந் திரவாணன் சேடன்போல்-வேணும் பனகசய னத்துறைவோன் பாரிடந்துங் காணாக் கனகசபை யிற்றண்டைக் கால். (168) "பாம்பணையிலே பள்ளிகொள்வோனாகிய திருமால், பூமியைத் தோண்டிக் கூர்மமாகிச் சென்றும் அந்நாளிற் காணவியலாததாக விளங்கியதும், பொன்னம்பலத்திலேயான் இன்று காணப் பேறுபெற்றமாகிய கழல் விளங்கும் நின் திருவடிகளைக் காணவும் தொழவும் போற்றவும், கண்ணும் கையும் நாவும், இந்திரனைப் போலவும் வருணனைப் போலவும் ஆதிசேடனைப் போலவும், ஆயிரமாயிரங்களாக எனக்குத் தந்து அருளவேண்டும், பெருமானே!