பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xii

'எமகண்டமோ?' என்ற திகைப்புடன் அதிமதுரம் வினவ, காளமேகம் அதனை விளக்கினார்.

எம கண்டம்

பதினாறடி நீளம், பதினாறடி அகலம், பதினாறடி ஆழம் உடையதாகப் பூமியிலே ஒரு பெரிய குழியினை முதலிலே வெட்ட வேண்டும். அதன் நான்கு மூலைகளிலும் பதினாறடி உயரமுள்ள இரும்புக் கம்பங்கள் நாற்றப் பெறும். அவற்றின் மேலாக, நாற்புறமும் சட்டமிட்டு, அச்சட்டங்களின் நடுப்பகுதியிலே இரு குறுக்குச் சட்டங்களை இடவேண்டும். அந்தக் குறுக்குச் சட்டங்கள் சந்திப்பதும், குழிக்கு நடுவே மேலேயிருப்பதுமான பகுதியிலே இரும்புச் சங்கிலிகளால் தாழவிடப் பெற்ற உரியொன்று தொங்கும்.

குழியினைப் பருத்த புளியங்கட்டைகளால் நிரப்பி, அதன் நடுவிடத்தே ஒரு பெரிய எண்ணெய்க் கொப்பரையை வைத்து, அதனுள் அரக்கு, மெழுகு, குங்குலியம் போன்றவற்றை இட வேண்டும். கட்டைக்கு நெருப்பிட்டு, அந்த எண்ணெய்க் கொப்பரை கொதித்துக் கொண்டிருக்கும் பருவத்திலே, போட்டியிடுபவர் அந்த உரியிற் சென்று அமர்ந்து கொள்வார்.

நயமான எஃகினாலே அடித்ததும், கூர்மையாகச் சமைத்ததும், பளபளவென்று தீட்டப்பெற்றதுமான எட்டு கத்திகளைச் சங்கிலியிற் கோர்த்து, அப்படி உரியிலிருப்பவர் தம் கழுத்தில் நான்கும், இடையில் நான்குமாகக் கட்டிக் கொள்வார்.

குழியின் நான்கு முனைகளிலும் நாற்றியிருக்கிற தூண்களருகே நான்கு யானைகளை நிறுத்தி, அந்தக் கத்திகளிற் கோர்த்த சங்கிலிகளை அவற்றின் துதிக்கைகளினாற் பற்றியிருக்கும் படியும் செய்யவேண்டும்.

இந்த நிலையிலே, உரியிலிருப்பவர், கொடுக்கப்பெறும் குறிப்புகளின்படி எல்லாம் அரை நொடி அளவிற்குள்ளாக ஏற்ற செய்யுட்களைச் சொல்லி வருவார். அச்செய்யுட்கள் பிழைபட்டாலோ, அன்றி அவர் செய்யுளே கூறத் தவறினாலோ, யானைகள் பற்றியிருக்கும் சங்கிலிகளை இழுக்க, கழுத்தும் இடையும் துண்டிக்கப்பட்டு, அவர் உடல் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெய்க் கொப்பரையுள் வீழ்த்தப்படும். இதுவே எமகண்டம் பாடுவது என்பது. 'இதனை நீர் செய்தற்கு வல்லீரோ?' என்றனர் காளமேகம்.

வென்ற கவிஞர்

அதிமதுரத்திற்கு அதனைக் கேட்டதும் நடுக்கம் எடுத்தது. அத்தகைய போட்டியை நினைக்கவே, அச்சம் எழுந்தது. காளமேகத்தையே அதனிடத்து ஈடுபடுத்தி விட நினைத்தார்.