கலைஞரின் சட்டமன்ற உரைகள்
103
காவலர்களுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது என்றாலும் அதிலே சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகள் தளர்த்தப் படவேண்டுமென்று இங்கே பேசிய எல்லாக் கட்சி உறுப்பினர்களும் எடுத்துக் காட்டினார்கள். அவைகளை அரசு விரைவில் ஆராய்ந்து ஆவன செய்யும் என்ற உறுதியை நான் இந்த மன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
காவலர்களின் குடியிருப்பு வசதிக்காக நாம் 1970-71-ஆம் ஆண்டில் ஒதுக்கிய தொகை முதல் பகுதிக்காக ரூ. 34.24 லட்சம். இரண்டாம் பகுதிக்காக ரூ. 15 லட்சம், ஆக மொத்தம் ரூ. 49.24 லட்சம். 1971-72-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் மொத்தம் ரூ. 83.62 லட்சம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆக இதுவரையில் காவலர் குடியிருப்புத் திட்டத்திற்காகச் செலவழிக்கப்பட்டிருக்கும் தொகை ரூ. 588.05 லட்சமாகும். குறிக்கோளில் 80 சதவீதம் நாம் குறிக்கோளாகக் கொண்டு இருக்கிறோம் என்றால், அதிலே 60 சதவீதம் இதுவரையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. காவலர்களின் மொத்த எண்ணிக்கை 36,958-ல் குடியிருப்பு வசதி செய்து தரப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,231 ஆகும். மீதம் உள்ளவர்களுக்கு விரைவிலே இந்த குடியிருப்பு வசதிகள் செய்வதற்கு அரசு தேவையான எல்லா நடவடிக்கைகளையும், முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதனையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
அது மாத்திரம் அல்லாமல், காவல் துறையிலே நல்ல வீரம் செறிந்த செயல்களைப் புரிகிற காவலர்கள், ஏனைய அதிகாரிகள், அவர்கள் நீண்ட நெடு நாட்களாகப் பணியிலே இருந்து, நல்ல பெயரோடும், நல்ல ஒழுக்கத்தோடும், மிகுந்த ஊக்கத்தோடும், அயராது பாடுபட்டு இருப்பார்களேயானால், அவர்களுக்கென்று 'முதலமைச்சர் பதக்கம்' என்கிற ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி, பதக்கம் மாத்திரம் அளிப்பது என்று இல்லாமல், அவர்களுக்கு தகுந்த ரூபாய்களையும் நன்கொடையாக வழங்கும் முயற்சியை இரண்டாண்டுக் காலமாக இந்த அரசு மேற்கொண்டிருக்கிறது. செப்டம்பர் திங்கள் 15-ம் நாள், நம்முடைய முன்னாள் முதலமைச்சர் அண்ணா அவர்கள் பிறந்த நாளில், காவலர்களுக்கு இந்தப் பரிசுகள் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து, இது வரையில் இரண்டு முறை அந்தப் பரிசுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டும், வருகிற ஆண்டுகளிலும் தொடர்ந்து இந்தப் பரிசு அளிப்பு விழாக்கள் நடைபெற இருக்கின்றன.