கலைஞரின் சட்டமன்ற உரைகள்
115
அளித்திருக்கின்றது. ஆனால் பத்திரிகையிலே என்ன செய்தி வருகின்றது? உண்ணாவிரதத்தில் இருந்துகொண்டிருக்கும்போது, துறைமுகத்திலிருந்து தொழிலாளர்கள் வெளியே வந்து, உண்ணா விரதம் இருந்த பந்தலைப் பிரித்துப்போட்டு, படங்களையெல்லாம் கிழித்துப்போட்டு அலங்கோலம் செய்தார்கள்; அமளி துமளி அ ஏற்பட்டது; அவ்வளவு பேரும் திராவிட முன்னேற்றக் கழக அரசால் ஏவி விடப்பட்டவர்கள்; காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது; அதற்குப் பிறகுதான் 10 பேராக இருந்த காவல்துறை 100 பேராகக் பெருகிக் கலவரத்தை அடக்கினார்கள் என்று செய்தி போடப்படுகிறது. அப்படிப்பட்ட தவறான தகவல்கள் போடப்படுகின்றன; மிகைப்படுத்திப் போடுவது ஒன்று; பொய்யையே போடுவது ஒன்று. 400 பேர் இருந்தார்கள் என்றால், 4,000 பேர் இருந்தார்கள் என்று போடுவது மிகைப்படுத்திப் போடுவது. 400 பேரில் 300 பேர் செத்து விட்டார்கள் என்று போடுவது பொய் போடுதல். அதைப் போலத்தான் அங்கே நடைபெற்ற உண்ணாவிரதத்தில் துறைமுகத் திலிருந்து தொழிலாளர்கள் வெளியே வந்தார்கள். வந்தவர்களில் சிலபேர் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு அப்பால், வெகு தொலைவிற்கு அப்பால், நின்றுகொண்டு மதுவிலக்கு ரத்துக்கு ஆதரவாக கோஷமிட்டார்கள். அது உண்மை. உடனடியாகப் போலீஸ் தலையிட்டு அவர்களை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் நடந்த நிலவரம். ஆனால் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்கள்கூட சொல்லாத கூற்று பத்திரிகையிலே வேண்டுமென்றே போடப்படுகிறது.
இன்னொரு நிகழ்ச்சி. வேலூரிலே இதுபோன்ற உண்ணாவிரதம் அதிலே கலந்துகொண்டவர்கள் யார், யார் என்று பத்திரிகையிலே செய்தி போடும்போது, நான் சாதாரணப் பத்திரிகையைக் கூட சொல்லவில்லை, தினமணிப் பத்திரிகை செய்தி போட்டது. என்ன போட்டது? வேலூரிலே நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலெக்டர் காரியாலயத்திலே 77 பேர் ஈடுபட்டார்கள். ஆளுங்கட்சி நீங்கலாக எல்லா அரசியல் கட்சிகளும் இந்த இயக்கத்திலே பங்கு கொண்டிருப்பதாக அந்த இயக்கத்தின் தலைவர் கூறினார். (எதிர் வரிசையிலே அமர்ந்திருந்த திரு. கே.டி.கே. தங்கமணியைப் பார்த்து) இதிலே நீங்கள் உண்டா?