பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

127

வரையிலும் இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுவது என்னுடைய கடமையாகும். குறிப்பாக 23 பரிந்துரைகள் முதல் கட்டமாக இப்போது ஏற்கப்பட்டிருக்கின்றன. அந்தப் பரிந்துரைகளின்படி காவலர்களுடைய சம்பளம், படி விகிதங்கள் உயர்த்தப் பட்டிருக்கின்றன. இதைக் குறித்து நண்பர் திரு. கே.டி.கே. தங்கமணி அவர்களும் வேறு சில உறுப்பினர்களும் “காவலர்களுடைய தினப்படி ரூ. 1.50 என்ற அளவில்தான் இருக்கிறது, அது உயரவே இல்லை” என்று சொன்னார்கள். அவர்கள் ஒருவேளை இந்தக் குறிப்பினைத் தெரிந்துகொள்ளாமல் சொல்லியிருக்கலாம் 2-10-1970-க்கு முன்பு போலீஸ் காவலர்கள் தினப்படி ரூ. 1.50 காசாக இருந்தது. 2-10-1970-க்குப் பிறகு அவர்களது நாள்படி குறைந்த பட்சம் 3 ரூபாய் என்றும், அதிகபட்சம் ரூ. 4.50 என்றும் உயர்த்தப் பட்டுள்ளது. தலைமைக் காவலர் தினப்படி ரூ. 2 ஆக இருந்தது 2-10-1970-க்குப் பிறகு ரூ. 4.50ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தினப்படி ரூ. 2.50 ஆகப் பெற்று வந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் 2-10-1970- லிருந்து ரூ. 4.50-லிருந்து ரூ.6.00 வரையிலும் பெற்று வருகிறார்கள். இன்ஸ்பெக்டர்கள் முன்பு ரூ. 2.50 லிருந்து ரூ.4.50 வரையிலும் பெற்றுவந்தனர். 2-10-1970-லிருந்து அவர்களது தினப்படி ரூ. 6.00 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

திருமதி த. ந. அனந்தநாயகி : தலைவர் அவர்களே, தினப்படி உயர்த்தப்பட்டிருக்கிறது என்று முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். அதற்கு உச்சவரம்பு இருப்பதால் அவர்கள் பெறுகின்ற வருமானம் குறையும் என்று சொல்கிறார்களே, அதுபற்றி என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது?

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் : அவர்களே, தினப்படி குறைந்தபட்சம் 3 ரூபாய் என்றும், அதிகபட்சம் 4.50 ரூபாய் என்றும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ஏதாவது சங்கடங்கள் இருக்குமானால் அவை ஆராயப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்

பொதுவாக, போலீஸ் கமிஷனுடைய பரிந்துரைகளின்படி இப்போது முதல் கட்டமாக, ஏற்கப்பட்டிருக்கிற சம்பள விகிதங்கள் எந்த அளவிற்கு உயர்த்தப்பட்டிருக்கின்றன என்பதை இந்த மாமன்றத்தில் இருக்கிற உறுப்பினர்கள் அனைவரும் அறிவர்.