134
காவல்துறை பற்றி
கட்சியினுடைய தலைவர் திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் குறைபாடுகளைச் சொல்லி அதே நேரத்திலே காவல் துறை ஆற்றிய அருஞ்சாதனைகளையும் எடுத்துக் காட்டினார்கள். நான் அதற்காக நன்றியைத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.
பொதுவாக, காவல் துறை மானியத்திலே விவாதம் நடைபெறும்பொழுது அதிகச் சூடு இருக்கும், காரசாரம் இருக்கும், கடுமை இருக்கும், ஆனால் இன்றைக்குக் காலையிலிருந்து மாலை வரையிலே கூட்டம் நிறைய இருந்தாலும், காரம் அதிகம் இல்லாமல் கடுமையான விவாதம் இல்லாமல் காவல் துறை மானியம் விமர்சிக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே காவல் துறை எவ்வளவு மென்மையாகச் செயல்படுகிறது என்பதை விளக்க விரும்புகிறேன்.
பெரிய திருட்டுக்கள், கொள்ளைகள் இவைகள் எல்லாம் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை காலையிலே பேசிய காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவர் திருமதி அனந்தநாயகி அம்மையார் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
23-4-1971, அந்த நாளிலே நம்முடைய சென்னை மாநகராட்சி மன்றத்திலிருந்து 65 ஆயிரம் ரூபாய் அளவுக்குப் பணம் காணாமல் போயிற்று. எந்தவிதமான தடயமும் கிடைக்க வில்லை. எப்படி எப்படி அந்தப் பணப்பெட்டி அங்கிருந்து வெளியேறியது என்பதை யாரும் சொல்வதற்கு இயலவில்லை. அவ்வளவு மர்மமாக அந்தத் திருட்டு நடைபெற்றது. பல பேர்களை சந்தேகப்பட்டார்கள். மாநகராட்சி மன்ற அலுவலர்கள் செய்திருக்கக் கூடுமோ, ஊழியர் செய்திருக்கக் கூடுமோ. என்றெல்லாம் சந்தேகப்பட்டார்கள். கடைசியில் மராட்டியம் போன்ற, மைசூர் போன்ற, ஆந்திரம் போன்ற மாநிலங்களிலே பணத்தோடு சிதறிக் கிடந்தார்கள். இவர்கள் எல்லாம் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள், திருச்சி மாவட்டத்தில் உள்ளவர்கள் என்றாலும், அவர்கள் அங்கிருந்து சென்னைக்கு வந்து 65ஆயிரம் ரூபாய் அளவுக்குத் திருடிக்கொண்டு பல்வேறு மாநிலங்களுக்கு ஓடிவிட்ட பிறகும் நம்முடைய காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து, இழந்த பணத்தில் பெரும் பகுதியை மீட்டார்கள். அந்த வழக்கிலே எட்டுப் பேர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.