154
காவல்துறை பற்றி
பெருமையடைகிறேன். ஏனெனில் எதிர்க்கட்சி வரிசையிலே இருந்த நேரத்திலேயும் போலீஸாருடைய துன்ப துயரங்களில் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நிறைந்த அக்கறை இருந்தது என்பதை எடுத்துக்காட்டுகிற வகையிலே அவர்கள் இங்கு படித்துக் காட்டிய பாடல் இருப்பதை அனைவரும் அறிவீர்கள்.
இன்று இங்கு பேசிய பலருடைய பேச்சில் ஒருவர் இருவர் தவிர, பரிதாபத்திற்குரிய காவல் துறையிலே இருக்கின்ற காவலர்களைப்பற்றி அவர்களுடைய கஷ்டங்களைப்பற்றி அவர்களுக்கு இன்னும் மேலும் என்ன என்ன வசதிகளைச் செய்து தரவேண்டும் என்பதுபற்றி அதிகமாகப் பேசவில்லை என்பதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. ஓரிருவர் பேசிய பேச்சிலேயும் மிகப் பெரிய இடத்தை அதற்காக அவர்கள் யாரும் தரவில்லை என்பதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
அன்றைக்கு எதிர்க்கட்சி வரிசையிலே இருந்தபோது நான் என்ன சொன்னேன்? நிலவிலே களங்கம் இருப்பதைப்போல இந்தத் துறையிலேயும் சில பேர்கள் இருக்கிறார்கள் என்று நான் அன்றைக்குச் சொன்னதையும் இன்று சுட்டிக்காட்டினார்கள். முதலமைச்சர் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்ட பிறகும் அதே விதமான கருத்தைச் சொல்லியிருக்கிறேன். இந்தத் துறையிலே இருக்கின்ற அத்தனை பேர்களும் தூய்மையானவர்கள், இந்தத் துறையை கட்டிக் காக்கின்றவர்கள், இந்தத் துறையிலே பரந்து கிடக்கின்ற பல்லாயிரக்கணக்கான காவலர்கள், அவர்களுடைய துணை அதிகாரிகள் அனைவருமே தூய்மையானவர்கள் என்று நான் எடுத்துக் கொண்டு இங்கு எழுப்பப்பட்ட விவாதங்களுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலரிடத்தில் நாம் வெறுப்பு அடைகிற அளவிற்குச் சில தவறான எண்ணங்கள், தவறான செயல்கள் நிச்சயமாக இருந்திடக் கூடும். அவைகளையெல்லாம் இது போன்ற மாமன்றங்களில் விவாதிக்கப்படுகிற நேரத்திலே, எடுத்து விளக்கப்படுகிற கருத்துக்களின் மூலமாக அவர்களே திருத்திக் கொள்வதற்கும் வழி ஏற்படும் என்ற வகையில்தான் மாண்புமிகு உறுப்பினர்கள் சூடாகத் தங்களுடைய உரைகளை ஆற்றியிருந்தாலும் கூட சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களை அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரியவர்கள் நிச்சயமாக சிந்தித்துப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையும் இங்கு நான் தெரிவித்துக் கொள்வேன்.