கலைஞரின் சட்டமன்ற உரைகள்
19
பெரும்பாலும் வயதானவர்கள். இதை யாரும் மறுப்பதற்கில்லை. கடந்த தடவை இந்த மன்றத்தில் வெளியிடப்பட்ட “யார் யார்” என்கின்ற புத்தகத்தில், எங்கள் கட்சியைச் சேர்ந்த திரு. நடராஜன் அவர்கள்தான் சட்டமன்ற உறுப்பினர்களில் இளைஞராக இருந்தார். இந்த தடவையிலும் எங்கள் கட்சியிலுள்ள திரு. வெங்கலம் மணி அவர்கள்தான் இளைஞராக இருக்கிறார்கள். ஆகவே இளைஞராக இருக்கின்றவர்கள் ஏதாவது தவறுகள் செய்யலாம், உணர்ச்சி வசப்படலாம், அதன் காரணமாக அவசரப்பட்டு பேசிவிடலாம். ஆனால் அறுபதாவது ஆண்டு கொண்டாடிக்கொண்டிருப்பவர்கள், அறுபதாவது ஆண்டு கொண்டாடி முடிந்திருப்பவர்கள் எல்லாம் ஆளும் கட்சியிலிருக்கிறார்கள், ஆகவே அவர்கள் எதிர்க்கட்சியிலுள்ள எங்களை புண்படுத்தாத வகையில் பேசவேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.
முன்னாள் போலீஸ் அமைச்சர் அவர்கள், போலீஸ் காரர்களை காவலர்கள் என்று சொல்லிவந்ததை, திருவொற்றியூரில் நடந்த திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் தங்களை "காவலர்கள்” என்று அழைத்துக் கொண்டதைக் கேட்டதும் உடனடியாக, "காவலர்கள்" என்று இருந்ததை மாற்றவேண்டும் என்று நினைத்தோம் என்று குறிப்பிட்டார்கள். அதற்கான ஆதாரத்தையும் நான் வைத்திருக்கிறேன். நாங்கள் அந்த வார்த்தையை உபயோகித்தோம், அதில் எச்சில் பட்டுவிட்டது என்று கருதி, அந்த வார்த்தை மாற்றப்பட்டது என்றால் நாங்கள் எவ்வளவோ வார்த்தைகளை உபயோகிக்கின்றோம், அவைகளை எல்லாமா இவர்கள் மாற்றுகின்றார்கள்? நாங்கள் அடிக்கடி 'மாவட்டம்' என்று உபயோகிக்கின்றோம், சர்க்கார் ஏடுகளில் இப்போது 'மாவட்டம்' என்றே பொறித்துக் கொண்டு வருகிறார்கள். அது மட்டுமல்ல, நாங்கள் அடிக்கடி 'அமைச்சர்' என்று உபயோகிக்கின்றோம், அதைப் பார்த்துவிட்டு "நீங்கள் அமைச்சர் என்று எப்படி சொல்லலாம், ஆகவே நாங்கள் அமைச்சர் என்ற பெயரை மாற்றிக் கொள்கிறோம்" என்று முற்படுவார்களோ என்னவோ தெரியவில்லை. 'காவலர்' என்ற சொல் களங்கத்திற்குரிய சொல்தானா? இல்லை என்பதை திருவள்ளுவரை விட்டே பதில் கூற விரும்புகிறேன். (கனம் திரு. கு. காமராஜ் : திருவள்ளுவரை எப்படி இங்கே கொண்டு வருவீர்கள்?) நான் இலக்கியமாக பேசுகிறேன். திருவள்ளுவரை எப்படி கொண்டுவர முடியும்,