கலைஞரின் சட்டமன்ற உரைகள்
207
போகிறேன் என்று சொன்னார். தேவையில்லை என்று சொன்னேன். மன்னிப்புக் கோர யாரிடத்தில் அனுமதி கேட்டாரோ தெரியவில்லை; அனுமதி கிடைக்காத காரணத்தால் என் முகத்தைப் பார்க்க வேண்டாமென்று கருதி இங்கிருந்து போய்விட்டாரோ என்று கருதுகிறேன்.
நல்ல பல யோசனைகளை உறுப்பினர்கள் எடுத்துச் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறது இந்த அரசு. அப்படி விரும்புகிற நேரத்தில் சொல்லப்படுகிற சிறு சிறு குறைபாடுகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவைகளைத் தொகுத்துச் சொன்னாலும், அவற்றிற்கு நான் இங்கே பதிலளிக்க நேரம் இல்லாமல் போனாலும் அவை நிச்சயமாகக் கவனிக்கப்படுகின்றன. ஏற்ற நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
—
திரு. கே. டி. கே. தங்கமணி அவர்கள் பேசும்போது, போலீஸ் நன்றாகத்தான் இருக்கிறது; அரசாங்கம்தான் ஆட்டிப்படைக்கிறது என்று சொல்லிக்கொண்டே வந்தார்கள். எங்கோ ஒரு ஊரில் மானாமதுரைக்குப் பக்கத்தில் நடைபெற்ற நிலத் தகராறில் போலீசார் நிலப்பிரபுக்களுக்குப் பக்கத்தில் இருந்தார்கள்; அரசாங்கம் தலையிட்டுச் சரி செய்தது என்று சொன்னார்கள். முதலில் போலீசார் சரியாக நடக்கிறார்கள்; அரசாங்கந்தான் தவறு செய்துவிட்டது என்ற கருத்தை வலியுறுத்தி வந்தவர்கள் திடீரென்று மானாமதுரைக்கு அருகில் போலீசார் தவறு செய்தார்கள்; அரசு சரி செய்தது என்று சொன்னார்கள். இதிலிருந்து தவறுகள் நடைபெறுவதற்கும் அரசுக்கும் கிஞ்சித்தும் தொடர்பு இல்லை என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.
இன்றைக்குக்கூட காலைப் பத்திரிகையில் பார்த்தேன். கேரளத்தில் பெண் போலீசை இரண்டு ஆண் போலீசார் பலாத்காரம் செய்தார்கள் என்ற செய்தியைப் பார்த்தேன், வேறு பத்திரிகையில் அல்ல; இந்துப் பத்திரிகையில்கூட வந்திருக்கிறது. இதற்கு அரசு பொறுப்பு என்று சொல்லமாட்டேன்.
இங்கேயுள்ள மற்ற இலாகாக்களிலேயும் இருப்பவர்கள், எல்லா அதிகாரிகளும் மனிதர்கள்தான். எல்லா அதிகாரிகளும் தவறு செய்பவர்கள் அல்ல. அதற்காக எல்லா அதிகாரிகளும் நல்லவர்களும் அல்ல. ஒருசில அதிகாரிகள் தவறு செய்யக்கூடும்.