பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

219

1970-ம் ஆண்டு வரையில் கான்ஸ்டபிள் என்று சொல்லப் படுகிற இரண்டாவது நிலை காவலாளருடைய அடிப்படைச் சம்பளம் 70 ரூபாயிலிருந்து 95 ரூபாய் என்கின்ற அளவிற்குதான் இருந்தது. 1970-க்குப் பிறகு அந்த அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தி 159 ரூபாயிலிருந்து 225 ரூபாய் வரை என்கின்ற அளவிற்கு அதை நாம் மாறுதல் செய்திருக்கிறோம்.

முதல் நிலை காவலாளர் என்ற பதவியே இல்லாமல் இருந்தது. அந்தப் பதவியை உருவாக்கி எஸ்.எஸ்.எல்.ஸி. படித்தவர்களுக்கு வேலையற்றிருப்பவர்களுக்கு இத்தகைய வேலைவாய்ப்பைத் தரலாம் என்ற நல்லநோக்கத்தோடு முதல் நிலைக் காவலாளர்கள் என்ற பதவியை அமைத்து அவர்களுடைய அடிப்படைச் சம்பளம் ரூ. 200-ல் இருந்து ரூ. 300 வரை என்று நிர்ணயித்தோம்.

தலைமைக் காவலாளர்களுடைய ஊதியம் 1970-ம் ஆண்டு வரையில் ரூ. 90-ல் இருந்து ரூ. 110 வரை இருந்ததை ரூ. 210-ல் இருந்து 325 ரூபாய் வரை என்று மாற்றினோம்.

துணை உதவி ஆய்வாளர்களுக்கு ரூ. 110-140 என்றிருந்தது 1970-ல். இப்போது ரூ 300-500 என்ற அளவிற்கு

உயர்த்தியிருக்கிறோம்.

துணை ஆய்வாளர்கள் என்ற பதவி ஏற்கனவே இல்லை. அந்தத் துணை ஆய்வாளர் டெப்டி இன்ஸ்பெக்டர் என்ற பதவியை உருவாக்கி ரூ.350-ல் இருந்து ரூ. 600 வரையில் அவர்களுக்கு ஊதியம் வழங்குகிறோம்.

இன்ஸ்பெக்டர்களுக்கு ரூ. 225-375 என்றிருந்தது. அதை ரூ. 425-ல் இருந்து ரூ. 700 என்ற அளவிற்கு இன்றைக்கு மாறுதல் செய்திருக்கிறோம்.

இதைப் போலவே இன்றைக்கு அவர்களுடைய அக விலைப்படியும் எந்த அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது என்றால், மற்ற அரசு அலுவலர்களுக்கு எல்லாம் உயர்த்தப்படுகிற நேரத்தில், அதோடு இணைத்து உயர்த்தப்படுகிறது என்பதையும் அவையில் இருக்கிற மாண்புமிகு உறுப்பினர்கள் நன்றாக அறிவார்கள்.