கலைஞரின் சட்டமன்ற உரைகள்
227
திரு. கோவை செழியன் : தலைவரவர்களே, நான் நம்முடைய தமிழகப் போலீசின் திறமையை என்றைக்கும் குறை சொல்லவில்லை. இங்கே அரசியல் சம்பந்தமாக, என் மாதிரி அரசியல்வாதிகள் சொல்கிற குற்றச்சாட்டுகள் இன்னமும் இந்த மாதிரியான குற்றங்கள் கண்டு பிடிக்கப்படவில்லை என்பதுதான். உதாரணத்திற்குச் சொல்கிறேன். என் வீட்டில் 4 ஆயிரம் ரூபாய் பெறுமான பொருள் திருடு போய் விட்டது. அது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெங்கா விவகாரம், சுகுமாரன் கொலை போன்றவைகளில் குற்றவாளிகளை ஏன் கண்டு பிடிக்க வில்லையென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
திரு. வி. கிருஷ்ணமூர்த்தி (நெல்லிகுப்பம்) : தலைவரவர்களே, அவர் வீட்டுக்கு யார் யார் வந்தார்கள் என்று யோசனை செய்துபார்த்துச் சொல்லட்டும்.
திரு. கோவை செழியன் : திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களும் போனவாரம் வந்தார்கள்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவ ரவர்களே, நான் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகிற நேரத்தில் மத்திய அரசினுடைய அந்த ஆண்டு அறிக்கையைத்தான் படித்தேன். நம்முடைய மாநிலத்தில் எவ்வளவு குற்றங்கள் பதிவாகியிருக்கின்றன, எந்த அளவிற்கு தண்டிக்கப்பட்டார்கள் என்ற இந்த எண்ணிக்கை விவரங்கள் மத்திய அரசின் தகவல் தான். அதைத்தான் நான் படித்தேன். திரு. செழியன் கூறிய விவகாரங்களைப் பற்றி நான் பிறகு சொல்கிறேன். அவர்கள் 60 சதவீதம் வழக்குகளில் 51 சதவீதம் வழக்குகள் அரசியல் வழக்குகள் என்று எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் என்ன கணக்குப் போட்டுச் சொன்னார்கள் என்று தெரியாது. அவர் சொன்னதை விளக்குவதற்கு அவருக்கு நேரம் இருக்காது. அவர் தனியாக ஒரு நாள் சந்தித்து விளக்கினால் நானும் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.
இதைப் போலவே கொலை வழக்குகள் என்று எடுத்துக் கொண்டால்கூட பெரிய மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் 41 சதவீதம்தான் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். நான் ஏற்கெனவே சொன்ன மாநிலங்களின் பட்டியலைப் பார்த்தால், அவைகளைத்