கலைஞரின் சட்டமன்ற உரைகள்
241
ஐ .ஜி. பதவிக்குச் சமமான பதவியில் இருக்கிறார். அதற்கடுத்த சிங்காரவேலுவும், குப்புசாமியும் ஓய்வுபெற்று விட்டார்கள். ஆறாவதாக இருக்கிற ஆர். என். மாணிக்கம் டெல்லியில் ஐ. ஜி. பதவிக்குச் சமமான பதவியில் இருக்கிறார். ஏழாவதாக இருப்பவர் தான் ஷெனாய். ஆகவே, எல்லா வகையிலும் அந்தப் பதவிக்குத் தகுதியானவருக்குத்தான் அடிஷனல் ஐ. ஜி. என்கிற அந்தப் பதவி தரப்பட்டிருக்கிறதே அல்லாமல் எந்த முறைகேடும் இதில் நடைபெறவில்லை.
விசாரணைகளின் அறிவிப்புகள் எல்லாம் இங்கே வைக்கப்படவில்லை. வைக்கப்பட்ட அறிவிப்புகளின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று திருமதி அனந்தநாயகி அம்மையார் இங்கே குறிப்பிட்டார். பெரியகுப்பம் நிகழ்ச்சி பற்றி ஏன் அறிக்கை வைக்கவில்லை என்று கேட்டார்கள்.
ஒரு புதிய மாறுதல் முன்பிருந்த அரசுகளுக்கும் இப்போதுள்ள அரசுக்கும் உண்டு. அதாவது முன்பெல்லாம் விசாரணையே கிடையாது. விசாரணை நடந்தால்தானே. ஏன் அறிக்கையை சபையில் வைக்கவில்லை என்று கேட்க முடியும். இப்போதுள்ள தொல்லை எல்லாம் நாங்கள் விசாரணை வைத்து விடுகிறோம். அதனால் அறிக்கை எங்கே, எங்கே என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இது ஒரு ‘ஜுடிஷியல் என்கொயரி' கூட அல்ல. ஜுடிஷியல் என்கொயரி-இன் அறிக்கைகள் எல்லாம் வைக்கப்படுகின்றன. ஒரு அதிகாரி யினுடைய விசாரணை அறிக்கை வைக்கப்பட வேண்டுமென்று உறுப்பினர்கள் விரும்புவார்களானால் அதையும் வைக்கத் தயாராக இருக்கிறோம்.
திரு. ஆர். பொன்னப்ப நாடார் : இந்தப் பெரியகுப்பம் சம்பந்தமாக பலதரப்பட்ட கருத்துக்கள் இருப்பதால் அந்த அறிக்கையை இந்த மன்றத்தில் வைப்பதன்மூலம் தவறான கருத்துக்கள் அகற்றப்படுவதற்கு உதவியாக இருக்கும். ஆகவே, அந்த அறிக்கையை இந்த அவைமுன் வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அது அச்சாகிக் கொண்டிருக்கிறது. முடிந்ததும் இந்த அவையில் வைக்கப்படும்.
9 - க.ச.உ. (கா.து.)