பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

267

கழக ஆட்சியிலே நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை யெல்லாம் எடுத்துக்காட்டி, இதற்கெல்லாம் கருணாநிதிதான் நேரடிப் பொறுப்பு என்ற வகையிலே ஆளுங்கட்சியிலே உள்ளவர்கள் பேசினார்கள். அதிலும் குறிப்பாகக் குடந்தை சட்டமன்ற உறுப்பினர் திரு. இராதா அவர்கள் வேகமாகப் பேசும் பொழுது குறிப்பிட்டார்கள். இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் அன்றைய தினம் சுற்றுலா மாளிகையில், கும்பகோணத்தில் உட்கார்ந்து கொண்டு அவருடைய கடையைத் தகர்க்கச் சொன்னார் என்ற வகையிலே எடுத்துச் சொன்னார்கள். இன்னொன்றும் சொன்னார்கள், ஏதோ இன்ன போலீஸ் அதிகாரி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிரி என்று நான் பொதுக் குழுவிலே சொன்னதாகவும் சொன்னார்கள். இரண்டுமே நான் மறுக்கக்கூடிய விவகாரங்கள் என்பதை இங்கே எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். இதை விவாதப் பொருளாக்கிட வேண்டுமென்று நான் விரும்பவில்லை. அதை மறுக்க வேண்டிய கடமை என்பதற்காக எடுத்துக்காட்ட விரும்புகிறேனே அல்லாமல் வேறல்ல.

ஏதோ கழக கழக ஆட்சியிலே நடைபெற்றதெல்லாம் கருணாநிதியே நேரிலே போய் இருந்து செய்ததுபோல், லாக்கப்பிலே யாராவது இறந்து விட்டால் அப்படி இறந்தவரின் கழுத்தை நெறித்துக் கொன்றதே கருணாநிதிதான் என்கின்ற வகையிலேயெல்லாம் பேசினார்கள். இங்கே பேசாவிட்டாலும் வெளியிலே பேசிக் கொண்டிருக்கின்ற நண்பர்களுக்கு நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன். இந்த ஆட்சி வந்ததற்குப் பிறகு போலீஸ் லாக்கப்பிலே எத்தனை சாவுகள் ஏற்பட்டதாக இதே மாமன்றத்தில் எத்தனையோ ஒத்திவைப்புத் தீர்மானங்கள் வந்திருக்கின்றன என்பதை ஒருமுறையும் நாம் நினைவுகூர வேண்டும். இந்த லாக்கப் சாவுகளுக்கெல்லாம் இங்கே அமர்ந்திருக்கின்ற அமைச்சர்கள் தான் காரணம் என்று அவசரப் பட்டோ, ஆத்திரப்பட்டோ, அசூயையின் காரணமாகவே நான் முடிவிற்கு வந்துவிடமாட்டேன், அப்படிப்பட்ட பிரச்சாரம் செய்கின்ற இழிதகை எனக்கு நிச்சயமாகக் கிடையாது.

ஆனால் இந்த ஆட்சி வந்தபிறகு 8-7-1977-இல் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் இருபான் என்ற