பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

காவல்துறை பற்றி

உரை : 15

நாள் : 04.05.1990

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, காவல்துறை குறித்த விவாதத்திற்கு பதில் அளிப்பதற்கு முன்பு. இந்த மாமன்றத்திற்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். The Supreme Court have directed the Government of India to constitute a Tribunal within one month from today. (மேசையைத் தட்டும் ஒலி).

தஞ்சை விவசாயிகளின் சார்பாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசும் இணைந்து சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது உங்களுக்குத் தெரியும். கர்நாடக மாநிலம் இன்னமும் பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று கூறியபோது, இனிமேல் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை என்கிற தீர்மானத்தை, எல்லாக் கட்சிகளின் சார்பிலேயும், அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் அந்த வழக்கிலே வாதாடுகின்ற வழக்கறிஞர்களுக்கு மேலும் உறுதுணையாக இருக்கும் விதத்தில் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறீர்கள். அந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் இந்த வெற்றியிலே பங்குண்டு என்பதைத் தெரிவித்து, அவர்களுக் கெல்லாம் என்னுடைய உளமார்ந்த நன்றியை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

திரு. உ. ரா. வரதராசன் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் இங்கே உரை நிகழ்த்தியபோது, இறுதியிலே, அந்த கடிகாரத்தினுடைய வேகத்திற்கும் மணி யினுடைய ஓசைக்கும் இடையே, நான் சொல்லிய கருத்துக்களுக்கு இயல்புடையதாக இருந்தாலும்கூட, ஒரு பழமொழியைச் சொன்னேன். அந்தப் பழமொழி, அவைக் குறிப்பிலே இடம் பெறுவது எனக்கும் அழகல்ல; இந்த அவைக்கும் அழகல்ல என்பதனால், அதனை நீக்கிவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.