பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

373

காவல்துறை என்ற காரணத்தினால் எல்லோருடைய கருத்துக்களும் அதற்குத் தேவைப்படுகின்றன. ஆனால் மிகச் சாதாரண ஒரு காரணத்தைக் காட்டி அவர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளாமலேயே போயிருக்கிறார்கள்.

நான் காலையிலே சொன்னேன், ஆய்வுரையில் இது போன்று வாக்கியங்கள் இன்று நேற்றல்ல, அ. தி. மு. க. ஆட்சிக் காலத்திலேயிருந்து நிறைய இடம் பெற்றிருக்கின்றன என்று நான் குறிப்பிட்டேன். 1980-81-ஆம் ஆண்டு இந்த அவையிலே வைக்கப்பட்ட காவல்துறை ஆய்வுரையில், 23-ஆம் பக்கத்தில் வந்திருக்கின்ற அந்த வாசகம்.

"23-12-1980-லேயிருந்து நாராயணசாமி நாயுடு தலைமை யிலான சங்கம் இன்றியமையாப் பொருள்களை எடுத்துச் செல்வதைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தைத் தொடங்கி மாநில அளவிலான முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி அப்போராட்டத்தில் பாலங்களை வெடி வைத்துக் தகர்த்தல், பேருந்துகளையும், லாரிகளையும் கொளுத்துதல், மின் கம்பிகளை வெட்டி நெடுஞ்சாலைகளின் குறுக்காகப் போடுதல், நீர் வழங்கும் குழாய்ப் பாதைகளை சேதப்படுத்துதல் போன்ற பல்வேறு வன்முறைச் செயல்களில் ஈடுபட்டார்கள்" என்று விவசாய சங்கத்தினுடைய தலைவர் அவர்களைப் பற்றியே 1980-81-ஆம் ஆண்டு காவல்துறை ஆய்வு உரையிலே கூறப்பட்டு இருக்கிறது. அதை எடுக்கவேண்டும் என்று எதிர்க்கட்சியினர் யாரும் கூறி வெளிநடப்பு கூட செய்யவில்லை. ஆனால் அந்தக் கருத்துக்கு மாறான கருத்துக்களை விவாதத்திலே எடுத்து வைக்கின்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதற்கு எதிர்க்கட்சியினர் வாதிட்டிருக்கிறார்கள். ஆனால், அதே 1980-81-ல் 27-ஆம் பக்கத்தில் “ஆத்தூர் கடைத் தெருவிலே உள்ள ஜாதி இந்துக்களின் கூரைவேய்ந்த கடைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட விவசாயிகள் தீயிட்டார்கள்" என்றே கூட அவர்கள் ஒரு வாக்கியத்தைப் பதித்து இருக்கிறார்கள். அதற்காக இதுபோன்ற எந்த ஒரு முடிவையும் எந்த ஒரு நிலையையும் அன்றைக்கு இருந்த எதிர்க்கட்சியினர் எடுக்கவில்லை. மாறாக, ஆய்வு உரையிலே வந்திருக்கின்ற அந்தக் கூற்று தவறானது என்று சுட்டிக் காட்ட வாய்ப்பு அன்றைக்கு பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.