கலைஞரின் சட்டமன்ற உரைகள்
385
அவர்கள் என்னிடம் தொடர்பு கொண்டு இதுபற்றி கவலையோடு விசாரித்தார்கள். அவர்கள் எல்லாம் சொன்ன யோசனைப்படி, ஒரு அமைதிக் குழு அங்கே அமைக்கப்பட்டு, அதற்குத் தலைவராக ராமசுப்பிரமணிய ராஜா நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த அமைதிக் குழுவில், ராமசுப்பிரமணிய ராஜாவும், திருவேட்டை என்ற ஆதி திராவிடர் பெருமக்களுடைய தலைவரும், கங்காராம் துரைராஜ் அவர்களும் அடங்கிய ஒரு அமைதிக் குழு அங்கே அமைக்கப்பட்டு, இப்போது அங்கே அமைதி நிலவுகிறது. கலவரத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு ரூ. 10,000 வீதம், அரசின் சார்பில் நிதி வழங்கப்பட்டிருக்கிறது. காயம் உற்றவர்கள் சிகிச்சை செலவுகளுக்காக ரூ. 500 வீதம் வழங்கப்பட்டிருக்கிறது. 78 பேர்களுக்குரிய சொத்து மதிப்பு ரூ. 5.4 லட்சத்திற்கு பனை மரங்களும், தென்னை மரங்களும் கரும்புப் பயிர்களும் நாசமாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். அங்கே நஷ்ட ஈடு தருவது பற்றி வருகின்ற கோரிக்கைகளைப் பெற்று அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்பதை நான் கூறிக் கொள்ளக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
நம்முடைய நண்பர் திரு. லத்தீப் அவர்கள் பெரம்பலூரில் விகாளத்தூரில் நடைபெற்ற கலவரத்தைப் பற்றிக் குறிப்பிட்டு; அதிலே மாவட்ட அதிகாரிகள் சரியாக நடந்து கொள்ளவில்லை. அவர்களுடைய அறிக்கைகள் ஒருதலைப் பட்சமாக இருந்தன என்று குறிப்பிட்டார்கள். நான் திரு. லத்தீப் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த அரசு சிறுபான்மை சமுதாய மக்களுக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை அவர்கள் மறுக்கமாட்டார்கள். சிறுபான்மை மக்களிடத்திலே அன்பு காட்டுகிற காரணத்தால், ஒருசிலர் அதையே சாக்காக வைத்து இந்த அரசின் மீது குறை கூறி வருவதையும் அவர்கள் உணரவில்லை. ஆனால் மத்தளத்திற்கு இருபுறமும் இடி என்பதைப்போல, இன்றையதினம் திரு. லத்தீப் அவர்கள் பேச்சைப் பார்க்கும்போது, உரலாக இருந்த நாம் இன்று மத்தளமாக மாறிவிட்டோம் போலும் என்ற எண்ணம்தான் எனக்கு ஏற்பட்டது. பரவாயில்லை. உரலில் இருந்து எழும்புகின்ற ஓசையைவிட, மத்தள ஓசை இனிமையாக இருக்கிற காரணத்தால், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.