கலைஞரின் சட்டமன்ற உரைகள்
397
ரிசீவ் செய்யத் தவறிவிட்டது உண்மை. கொஞ்சம் காலம் கடந்து டெலிபோனை அவர்கள் எடுத்து இருக்கிறார்கள். எடுத்த உடனே அவர்கள் சொன்ன விலாசத்துக்கு இவர்கள் செல்லவில்லை. பக்தவச்சலம் காலனி என்று ஒன்று உண்டு; பக்தவச்சலம் சாலை என்றும் ஒன்று உண்டு. இந்தக் குழப்பத்தில் அவர்கள் காலனிக்கு செல்வதற்குப் பதிலாக சாலைக்குச் சென்றுவிட்டார்கள், அல்லது சாலைக்கு செல்வதற்கு பதிலாக காலனிக்குச் சென்றுவிட்டார்கள். அங்கே சென்று திருத்திக் கொண்டு அந்த இடத்திற்குச் செல்வதற்கு முன்பாக கொள்ளைக்காரர்கள் வெளியேறி விட்டார்கள். இருந்தாலும் கூட அவர்களுடைய தாமதத்துக்கும், அலட்சியத்துக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனப்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
டி. ஜி. பி எண்ணிக்கை தமிழ்நாட்டில் ரொம்ப அதிக மாகிறது என்று ஒரு குறை சொல்லப்பட்டது. நம்முடைய தமிழகத்தில் 3 டி. ஜி. பி. தான். கர்நாடகத்தில் 4 டி. ஜி. பி.; ஆந்திராவில் 5 டி. ஜி. பி. கேரளாவில் 4 டி. ஜி. பி. இருக்கிறார்கள். எனவே அந்த எண்ணிக்கை ஒன்றும் அதிகமல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. பாலசுப்பிரமணியம் இன்னொரு குற்றச்சாட்டைச் சொன்னார். சேத்துப்பட்டு பாலத்துக்கு அருகிலே குடிசைபோட்டு 'கோல்டு பீர்' குளிர்ந்த பானம் வெளியே வைத்து வியாபாரம் செய்கிறார்கள்; அங்கே போய் எல்லோரும் குடிக்கிறார்கள் என்று சொன்னார். அதை விசாரித்தேன். இருந்தது உண்மை. ஆனால் 12-2-1990-லேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதை நடத்திய கௌரி என்பவர் கைது செய்யப்பட்டு, 800 ரூபாய் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த இடம் பிரித்து எறியப்பட்டு இருக்கிறது. அங்கே உட்கார்ந்து மது அருந்திய 5 பேருக்கு தலைக்கு 150 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது; நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இது ருக்கிறது. இது 2 மாதத்திற்கு முன்னால், பிப்ரவரி மாதத்தில் நடந்து இருக்கிறது. ஆனால் அடிக்கடி அங்கே போகக்கூடிய வழக்கம் அவருக்கு இல்லாத காரணத்தால் (சிரிப்பு), போகத் தேவையும் இல்லாத காரணத்தால், இன்னும் இருப்பதாகக் கருதிக்கொண்டு, அவர் சொல்லியிருக்கக் கூடும். அது பிப்ரவரி மாதத்திலேயே எடுக்கப்பட்டுவிட்டது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.