பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

433

சந்திரலேகா வழக்குரைஞர் கால அவகாசம் அவர்தான் கேட்டார் - கேட்டதின் பேரில் நான்கு முறை மீண்டும், மீண்டும் இந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையிலே தமிழ்நாடு காவல் துறை என்ன செய்ய முடியும் என்பதை இந்த வினாவை எழுப்பிய மாண்புமிகு உறுப்பினர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அதுபோலவேதான் வக்கீல் சண்முகசுந்தரம் மீது தாக்குதல். 30-5-95 அன்று வழக்குரைஞர் சண்முகசுந்தரம் அவரது இல்லத்திலே இருந்தபோது, பயங்கரமாகத் தாக்கப்பட்டார். 80-க்கு மேற்பட்ட இடங்களில், நரம்புகள் வெட்டுப்பட்டிருந்தன. அதற்கு பிறகும் உயிரோடு இருப்பது வியப்புக்குரிய ஒன்றுதான். இரத்த வெள்ளத்திலே மிதந்து கொண்டிருந்த காட்சியை நாங்கள் எல்லாம் சென்று கண்டோம். அவர் மருத்துவமனையிலே சேர்க்கப்பட்டு, மருத்துவர்களுடைய தீவிர சிகிச்சைக்குப் பிறகு பிழைத்துக் கொண்டார். ஆனால், அந்த வழக்கில், 14-6-95-ல் சிலர் கைது செய்யப்பட்டார்கள். பிரதான குற்றவாளி என்று சொல்லப்பட்ட அந்தக் கூட்டத்தினுடைய தலைவன் வெல்டிங் குமார் கைது செய்யப்படாமலே ஒளிந்து கொண்டிருந்தான். பிறகு கழக ஆட்சி தோன்றிய பிறகு 10-7-96 அன்று அந்த வெல்டிங் குமார் தானாகவே, நீதிமன்றம் ஒன்றில் சரண் அடைந்துவிட்டான். வழக்கு தொடர்ந்து விசாரணையிலே இருந்து வருகிறது. எனவே, வழக்கை யாரும் விட்டுவிடவில்லை, நடந்து கொண்டிருக்கிறது. விஜயன் வழக்கைப் பற்றியும் நம்முடைய ரங்கநாதன் அவர்கள் கேட்டு, மிகவும் ஆத்திரத்தோடு என்ன செய்கிறீர்கள், யாருக்கு பயப்படுகிறீர்கள் என்று எல்லாம் என்னைப் பார்த்துக் கேட்டார். ஆவேசமாகப் பேசவேண்டும் என்பதற்காக கேட்டிருப்பார். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் என்று ரங்கநாதன் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். (மேசையைத் தட்டும் ஒலி). இருந்தாலும் அப்படி கேட்டார். 21-7-94 அன்று வழக்குரைஞர் விஜயன் தாக்கப்பட்டார். 25-7-96 அன்று நான்கு நபர்கள் சரண் அடைந்தார்கள். வாக்குமூலம் கொடுத்தார்கள். அப்படி சரணடைந்தவர்கள் எல்லாம் உண்மையான குற்றவாளிகள் அல்ல. போலிகள். தயாரிக்கப்பட்ட போலிகள். அந்தப் போலிகள் சென்று நாங்கள்தான் இந்தக் காரியத்தைச் செய்தோம் என்று சரணடைந்தார்கள்

15 - க.ச.உ. (கா.து)