434
காவல்துறை பற்றி
நீதிமன்றத்திலே. 8-8-94 அன்று வழக்கு தமிழக அரசின் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டது. பின்னர் உச்சநீதிமன்ற ஆணைப்படி, சி. பி. ஐ. இந்த வழக்கை 8-9-94 முதல் ஏற்றுக்கொண்டது.
இவர்கள் இங்கேயிருந்த கடந்த கால அரசினர், இதைக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றினாலும்கூட அதை ஏற்றுக் கொள்ளாமல், விஜயன் உச்ச நீதிமன்றத்திலே கொடுத்த குரலின் காரணமாக, சி. பி. ஐ. விசாரணைக்கு அந்த வழக்கு மாற்றப்பட்டது. சி. பி. ஐ. விசாரணை செய்து, 13 குற்றவாளிகள் மீது நீதிமன்றத்திலே வழக்குப் பதிவு செய்தது. ஏற்கெனவே சரணடைந்த 4 நபர்கள் இந்த வழக்கிலே சம்பந்தப்படாதவர்கள் என்றும், காவல்துறை அதிகாரிகள் 6 பேர்தான் போலிக் குற்றவாளிகளை அனுப்பி சரணடைய வைக்கக் காரணமானவர்கள் என்றும், சி. பி. ஐ. கண்டு பிடித்து, அந்த 6 காவல்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை சி. பி. ஐ. கேட்டுக்கொண்டது. ஆனால், அரசு நடவடிக்கை எடுத்ததா என்றால், எடுக்கவில்லை, எடுக்காது. குற்றங்கள் நடைபெறலாம். எண்ணிக்கையை நம்முடைய திருநாவுக்கரசு அவர்களும்கூட ஒப்பிட்டுக் காட்டலாம். ஆனால், நடைபெற்ற குற்றங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கின்ற அரசு இந்த அரசு என்பதையும், நடவடிக்கை எடுக்க தயங்குகின்ற, அரசாக, மறுக்கின்ற அரசாக இருந்தது கடந்தகால அரசு என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது, திருநாவுக்கரசு உட்பட என்று நான் பணிவன்போடு கேட்டுக்கொள்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி).
கழக அரசு ஏற்பட்ட பிறகு அந்த 6 அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்டது. போலிக் குற்வாளிகளைக் கொண்டுபோய்க் காட்டினார்களே அந்த 6 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்டு, வேலை நீக்கமும் செய்தது. அதன் அடிப்படையில் சி. பி. ஐ. அந்த 6 போலீஸ் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கிறது. 10-7-96 அன்று நீதிமன்றத்திலே இந்த 6 காவல்துறை அதிகாரிகளும் ஆஜராகி வழக்கு நடைபெற்று வருகிறது. 4-9-96க்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. அவர் கேட்டதற்காக இவ்வளவு
விவரங்கள்.