பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

439

மோசமான ஒரு சூழ்நிலை சமுதாயத்திலே ஏற்பட்டு விடும் என்பதற்காகத்தான் நாம் மது விலக்கு கொள்கையிலே தீவிரமாக இருக்கிறோம், பேசுகிறோம், செயல்படுகிறோம். ஆனால், மது விலக்கு கொள்கையிலே நாம் தீவிரமாகச் செயல்பட செயல்பட, கள்ளச்சாராயம் பெருகுகிறது; கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு அது உதவிகரமாக ஆகிவிடுகிறது. மது விலக்கு கொள்கையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்; கள்ளச் சாராயமும் பெருக்கு எடுக்காமல் கண்காணிப்போடு இருந்திட வேண்டும். அதற்காகத் தான் மனதை மாற்றலாம் என்கின்ற எண்ணத்தோடு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரம் மகளிர் இந்தப் பணியிலே ஈடுபடுவதற்கு, சற்றொப்ப 25,000 மகளிருக்கு இந்தப் பணியினைத் தரலாம் என்று எண்ணி ஒரு திட்டத்தை வகுத்து இருக்கிறோம்; திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. உள்ளாட்சி மன்றங்களில் பெண் உறுப்பினர்கள், அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் களாக இருந்தாலும், பெண் உறுப்பினர்கள் இடம் பெறுகிற நேரத்தில், அவர்களுடைய துணையையும் பெற்று ஒவ்வொரு ஊரிலும் இந்த மது விலக்கு பிரச்சாரத்தை செய்ய, அந்த 25,000 மகளிருக்கும் வழிவகை ஏற்படும் என்ற எண்ணத்தில் அந்தத் திட்டத்தை தீட்டிக்கொண்டு இருக்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

குறிப்பிலேயே இன்னொரு கருத்தையும் அறிவித்து இருக்கின்றேன். கள்ளச் சாராயத்தை ஒழிக்கின்ற காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தமர் காந்தியடிகளுடைய பதக்கம் ஒன்றும். 10 ஆயிரம் ரூபாய் அன்பளிப்பும் அவர்களுக்கு வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறேன். ஒழிப்பவர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்; ஒழிக்காமல் உடந்தையாக இருப்பவர்களுக்கு பதக்கம் வழங்கப்படமாட்டாது; என்ன வழங்கப்படும்? மாறுதல்கூட வழங்கப்படாது; வேலை நீக்கம் (மேசையைத் தட்டும் ஒலி). என்ற உத்தரவு வழங்கப்படும் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்.

எதிர்கட்சித் தலைவர் அவர்களும் மற்றவர்களும், நம்முடைய லத்தீப் அவர்களும் சொன்னார்கள்; மற்றவர்களும் சொன்னார்கள்; பழனிசாமி சொன்னதாக எனக்கு நினைவு. 1990ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பிலே